சென்னையில் குவிந்த மீட்பு படை வீரர்கள்.. கனமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்

பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

Oct 14, 2024 - 23:09
Oct 14, 2024 - 23:40
 0
சென்னையில் குவிந்த மீட்பு படை வீரர்கள்.. கனமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்
வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரை ஓரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், ”வரக்கூடிய அக்டோபர் டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திலேயே அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்தே சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கணிக்க முடியும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கனமழையை ஒட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து, மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு 15 செயற்பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்றும் 40 சென்டிமீட்டர் மழை பெய்யும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் அரசு துரிதப்படுத்தி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த முறை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. மழை வந்தாலும் முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தங்க வைக்க உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரையில் படகுகள் தயார் நிலையில் உள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட கடலோரத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வரை மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 4 மாவட்டங்களுக்கு விட்டாச்சு லீவு.. மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் - உதயநிதி

இந்நிலையில், ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக வடசென்னை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள லோகநாதன், “பருவ மழையை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி விட்டது. அதேபோல வெள்ள பாதிப்புகள் இருந்தால் பொதுமக்களை மீட்கவும், பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யவும் தமிழக தீயணைப்பு துறை தயார் நிலையில் இருக்கிறது.

அதற்காக சென்னைக்கு வெளி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கனமழை எச்சரிக்கையை ஒட்டி தீயணைப்பு துறையினர் உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள், மீட்புப்படை படகுகள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துள்ளனர்.

மேலும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தந்த பகுதிகளில் ரப்பர் படகுகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்து பாதிப்பு இருந்தால் உடனடியாக பொதுமக்களை மீட்கவும் பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்யவும் தயார் நிலையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow