தோழமை கட்சிகளுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா..? திமுக பதில் சொல்ல வேண்டும்- தமிழிசை 

தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த திமுக, பாஜகவிற்கு குறிப்பாக பெண் தலைவர்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

Jan 4, 2025 - 21:00
 0
தோழமை கட்சிகளுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா..? திமுக பதில் சொல்ல வேண்டும்- தமிழிசை 
பாஜக போராட்டத்திற்கு திமுக அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழிசை குற்றம்சாட்டினார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து  பாஜக மகளிர் அணி சார்பில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ, ராதிகா சரத்குமார், சரஸ்வதி, சசிகலா புஷ்பா, விஜயதாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,  நாங்கள் அனைவரும் ஆளுநரை சந்தித்தோம். தமிழக மக்களைப் போலவே எங்கள் மனதில் இருக்கும் கேள்வி யார் அந்த சார் ?  முதலில் தமிழக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டத்தில் குஷ்பூ, சரஸ்வதி உட்பட பலர் கைதாகி இருக்கிறார்கள்.  ஏன் கைது ? எதற்காக இந்த கைது? பெண்களுக்கான பிரச்சனைகளை, பெண் தலைவர்கள் தமிழக வீதிகளில் வந்து குரல் எழுப்ப முடியாத ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு எங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த வழக்கைப் பொருத்த மட்டும் சிறப்பு புலனாய்வு குழுவில் கூட பாதிக்கப்பட்ட மாணவி இன்னொரு சார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை வலிமையாக பதிவு செய்திருக்கிறார் என்பதை நாங்கள் கேள்விப்பட்டோம்.  அப்படியானால் அந்த சாரை ஏன் மறைக்கிறீர்கள்? இந்த சார் எங்கே இருக்கிறார்? காவல் ஆணையர் சார் இல்லை என்று சொல்கிறார். யாரை காப்பாற்ற இதை செய்கிறீர்கள்?  எந்த ஊரை சார்ந்தவர் இந்த சார்? இந்த இயக்கத்தை சார்ந்தவர் இந்த சார்? எந்த பகுதியை சேர்ந்தவர் இந்த சார்? என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். 

ஆளுநர் கனிவோடு எங்கள் கருத்தை கேட்டறிந்தார். அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, தொடர்ந்து ஆளும் திமுகவினரால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம். 30.8.2024-ல் 4-வது படிக்கும் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். நான்கு மனிதர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் திமுகவினர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 6.8 .2023-ல் வளசரவாக்கத்திலும் பாலியல் பலாத்காரம் நடந்து அதுவும் திமுகவினர் தான் என்றும், ஆறு வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. 

2.1.2013-ல் திமுக இளைஞரணியில் தொடர்புடையவர்கள் பெண் போலீஸை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மதுரையிலும் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரும் திமுகவுடன் தொடர்புடையவர். இது மாதிரி எவ்வளவு பிரச்சனைகளால் இன்று பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் குற்றம் சாட்டுகிறோம். 

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏன் இன்னொரு சாரை நீங்கள் மறைக்க பார்க்கிறீர்கள்.? முதலமைச்சரோ துணை முதலமைச்சரோ ஏன் தனது குரலை எழுப்பவில்லை? ஏன் நீங்கள் வாயை திறக்கவில்லை. விசாரணை முடிந்தால் யார் அந்த சார்? என்று தெரிந்துவிடும் என கனிமொழி கூறுகிறார்.

குற்றவாளிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள். திமுக அரசு திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. போராடும் பெண் தலைவர்கள் கைதாகிறார்கள். ஆனால் கைதாக வேண்டியவர்கள் நடமாடுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்கக்கூடாது. 
சிபிஐ விசாரணை வந்தால் மட்டுமே இங்கே உள்ள பாராபட்ச நிகழ்வுகள் வெளிக்கொணரப்படும்.  அதனால் நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டுமென்று இங்கே பதிவு செய்கிறோம்.

மதுரையில் குஷ்பூ , உமா ராஜன் போன்றோர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்கள் ஆனால் வைகோவுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தீர்கள்.? சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றால் வைகோவால் அது பாதிக்கப்படாதா? டங்ஸ்டனுக்கு தீர்வு எப்போதோ மத்திய அரசு சொல்லிவிட்டது. ஆனால் அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். நான்கு நாட்களுக்கு முன், திருமாவளவன்,  மத்திய உள்துறை அமைச்சர் அதற்கான விவரத்தை சொன்ன பிறகும் போராட்டம் நடத்தினார்.

உங்கள் தோழமைக் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி.  ஆனால் பாஜகவிற்கு குறிப்பாக பெண் தலைவர்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கிடையாது. பெண்களை 6 மணி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்கிறீர்கள். இது மிக மிக மோசமான நிலை. பாஜகவின் பெண் தலைவர்கள், ஏதோ தீவிரவாதத்திற்கு போவது போன்று அவர்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்து இருக்கிறார்கள். இதற்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow