லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sep 5, 2024 - 02:10
 0
லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது

ஒரு தும்மல் போட்டாலும் அதனையும் உடனே முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றி புளகாங்கிதம் அடையும் இணையவாசிகள் வாழும் சமூகம் இது... அப்படிப் பட்டவர்களின் சமூகவலைதள ஆர்வலர்களின், பயணர் கணக்கினை முடக்குவதாகக் கூறி வில்லங்க வலை விரிக்கிறார்கள் ஆன்லைன் மோசடிக்காரர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய காவல் படை அணியில் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமூக வலைதள ஆர்வலரான காளிமுத்து, அவ்வப்போது தனது புகைப்படங்கள், கருத்துக்களையும் முகநூலில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு காளிமுத்துவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக, தகவல் ஒன்று வந்துள்ளது. 180 நாட்களுக்குப் பின்னர், இதுகுறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும், அல்லது உங்களது இந்த கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு விடும் எனவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் செய்வதறியாமல் காளிமுத்து திகைத்த நிலையில், அவருடன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளவர்கள் அனைவருக்கும் ப்ளோரா என்ற செயலியின் லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை நண்பர்கள் தெரிவித்த நிலையில், பதறிப் போன மத்திய பாதுகாப்பு படை வீரர் காளிமுத்து தன்னுடைய வேறொரு கணக்கிலிருந்து நண்பர்கள் அனைவருக்கும் தனது கணக்கு முடக்கப்பட்ட தகவலையும், அந்த லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புதுவித மோசடி மூலம், திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் உள்ள பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் போலி நபர்கள், State Bank of India என்பதற்கு பதிலாக State Bank of Indian என  குறுஞ்செய்திகளை அனுப்புவதோடு, ப்ளோரா என்னும் லிங்கை பயன்படுத்தி 4 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் அவர்களது கணக்கிற்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 4 லட்ச ரூபாய் வரை திரும்ப  வந்துள்ளதாகவும் போலியான செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

காளிமுத்து மட்டுமின்றி மத்திய பாதுகாப்பு படையில் இருக்கும் பெருவாரியான வீரர்களையும் குறி வைத்து இதுபோன்ற மோசடிகள் அரங்கேறுவதாகவும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காளிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடகங்களை முடக்கி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபடும் நிலையில், இணையவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே காளிமுத்து விவகாரம் நமக்கு அறிவுறுத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow