ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காளிக்குமார் சரக்கு வாகனத்தில் நேற்று திங்கட்கிழமை [03-09-24] திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சுழி-இராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென காளிக்குமார் ஒட்டி சென்ற சரக்கு வாகனத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மறித்துள்ளனர். 2 இருசக்கர வாகனங்களில் வந்த அவர்கள், காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். மேலும், டிஎஸ்பி காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்தியதாக 7 பேரை போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் விருதுநகரில் பணியில் ஈடுபடும் போலீசார் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டும் எனவும், இல்லாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.