மதுரை மாவட்டம் ஆலங்குளம் அருகே சிக்கந்தர் சாவடியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்தும் ,மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதே செந்தில் பாலாஜியை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் பத்து தலை ராவணன் என்றும், அவரது தம்பியை அசோகன், கும்பகர்ணன் இருவரும் அரக்கர்கள் என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு தியாகிகள் என்று கூறுகிறார். அன்றைக்கு ராவணனாக தெரிந்தவர் இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா? செந்தில் பாலாஜி எதற்காக உள்ளே சென்றார் என்று அனைவருக்கும் தெரியும். திமுகவில் மிசா போன்ற சட்டங்களில் பாடுபட்டும், ஸ்டாலினுக்காக உயிரை கொடுக்க நினைத்தவர்களை ஸ்டாலின் பார்த்ததுண்டா?
மேலும் படிக்க: பல கட்சிக்கு போய் வந்தவருக்குத்தான் தியாகப்பட்டம்... இபிஎஸ் கடும் விமர்சனம்!
அதேபோல் திமுக மூத்த தலைவர்கள வேலு, நேரு, பெரியசாமிக்கு இல்லாத மரியாதையை தற்போது செந்தில் பாலாஜி கொடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிமுகவை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று மூன்று கோரிக்கைகளை வைத்ததாகக் கூறுகிறார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதன் பயன் பிரதமர் மோடியின் கையில்தான் உள்ளது. என்ன கோரிக்கை? கல்வி நிதி, ஜிஎஸ்டி நிதி, மெட்ரோ ரயில் நிதி ஆகியவற்றை சொல்லி வலியுறுத்தினாரா? இல்லை தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக்க சென்றாரா? அல்லது செந்தில்பாலாஜி வழக்குக்காக சென்றாரா? தற்பொழுது கூட உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஏமாற்றம் இருக்காது மாற்றம் வரும் என்று கூறுகிறார். இது யாரை ஏமாற்றப்போகிறது என்று தெரியவில்லை .தமிழக மக்களின் மூன்று கோரிக்கைளை வலியுறுத்தியதாகக் கூறுகிறார். தமிழக மக்களுக்காகவா? இல்லை உதயநிதி துணை முதலமைச்சராக்க நேரம் கேட்கவா? இதற்குரிய விளக்கத்தை இன்னும் சொல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.