திருப்பதி லட்டு சர்ச்சை.. வீடுகளில் மாலை 6 மணிக்கு விளக்கேற்றுங்கள்.. தேவஸ்தானம் வேண்டுகோள்

Tirupati Laddu Controversy : திருமலை திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் தங்களது வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sep 23, 2024 - 16:51
Sep 23, 2024 - 18:28
 0
திருப்பதி லட்டு சர்ச்சை.. வீடுகளில் மாலை 6 மணிக்கு விளக்கேற்றுங்கள்.. தேவஸ்தானம் வேண்டுகோள்
tirupati laddu controversy

Tirupati Laddu Controversy : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு சர்வதேச அளவில் பிரபலமானது. நடப்பு ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் லட்டு தயாரிப்பதற்கான பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார். அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக அறிவித்ததோடு, அதற்கான ஆய்வு அறிக்கையையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா தலைவரான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை வழங்கியதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து மதத்தை அவமதித்திருப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு இந்து சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. இந்துக்களின் உணர்வுகள் மற்றும் மத உணர்வுகளை கொந்தளிக்க செய்துள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஏழுமலையான் கோயிலுக்குள் விலங்குகளின் கொழுப்புகளை அறியாமல் கொண்டு சென்ற செயலால் ஏற்பட்ட அபச்சாரத்திற்கு பரிகாரம் காண கோயில் தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள் ஆகியோருடன் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை 6 மணிக்கு சாந்தி யாகம் நடைபெற்றது. யாக சாலை ஜீயர்கள், ஆகம சாஸ்திர நிபுணர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சியாமளா ராவ் மற்றும் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது 

இதையடுத்து, கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்டதால் இன்று திருப்பதியில் தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டது.யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தெளிக்கப்பட்டது.இந்த நிலையில், அனைத்து பக்தர்களும் தங்களது வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, “ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ” என மந்திரம் படிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்புவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow