Sasikumar : “என்னை மன்னிச்சிடுங்க சசிகுமார் சார்..” முகநூலில் உருகிய நந்தன் இயக்குநர் இரா சரவணன்!

Era Saravanan Praised Sasikumar for Nandhan : சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. சாதிய அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், சசிகுமாரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், நந்தன் படத்தில் சசிகுமார் நடித்தது பற்றியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் குறித்தும் இயக்குநர் ரா சரவணன் மனம் திறந்துள்ளார்.

Sep 28, 2024 - 12:59
Sep 28, 2024 - 13:14
 0
Sasikumar : “என்னை மன்னிச்சிடுங்க சசிகுமார் சார்..” முகநூலில் உருகிய நந்தன் இயக்குநர் இரா சரவணன்!
சசிகுமார்

Era Saravanan Praised Sasikumar for Nandhan : சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கிய அவர், அதன்பின்னர் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஹீரோ உட்பட பல கேரக்டர்களில் நடித்துள்ள சசிகுமார் கரியரில், ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. அதேநேரம் சசிகுமாருக்கு பெரிதாக நடிக்கத் தெரியவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து நந்தன் படத்தில் கம்பேக் கொடுத்துள்ளார் சசிகுமார். கடந்த வாரம் வெளியான நந்தன் படத்தில் சசிகுமாரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியிருந்தனர். 
 
இந்நிலையில், நந்தன் படத்தின்(Nandhan) இயக்குநர் ரா சரவணன், சசிகுமாரின் நடிப்பு குறித்தும் அவரது அர்ப்பணிப்பு பற்றியும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “வேறு யாராக இருந்தாலும், ‘போடா அங்கிட்டு’ எனச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால், சசிகுமார் சார் என் அத்தனை கெடுபிடிகளையும் சகித்து நின்றார். ‘நந்தன்’ படத்துக்காக கெட்டப் தொடங்கி குணாதிசயம் வரை மாறினார். பற்கள் கறை பிடிக்க வெற்றிலைக்குப் பழக்கமானார். “கேரவன் ஏறவேகூடாது” என்பேன். ஷாட் முடிந்தும் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து இருப்பார். 

முகத்தில் மிதிக்கிற காட்சி... முடியவே முடியாது என்றார்கள் சசி சாருடன்(Sasikumar) உடன் வந்தவர்கள். பாலாஜி சக்திவேல் சார் கையெடுத்துக் கும்பிட்டார். “என்னால முடியாது சரவணன்... என்னைய விட்ருங்க ப்ளீஸ்” என்றார். “ஊர்க்காரங்க மாதிரி வெறிகொண்டு மிதிச்சா ஒரே ஷாட்ல ஓகே ஆகிடும். நீங்க தயங்கினா ஷாட் போயிட்டே இருக்கும்” என்றேன். என்னருகே நின்றபடி அதைக் கேட்டுக் கொண்டிருப்பார் சசி சார். சண்டைப் பயிற்சியாளர் ஜான் மார்க் டம்மி கட்டைகளை எடுத்துவர, அவற்றைத் தூரப் போட்டுவிட்டு பழுப்பேறிய தென்னை மட்டைகளைக் கொடுத்தேன். அந்த ஸ்பாட்டை விட்டே சண்டை பயிற்சியாளர் போய்விட்டார். 

ஊர்க்காரர்கள் முன்னால் கத்தினேன். “யாரும் சசி சார்னு இரக்கப்படுறதோ லேசுபாசா நடந்துக்கிறதோ கூடாது. ஊர்ச்சண்டை நடந்தா எப்படி அடிப்பீங்களோ அப்படி அடிக்கணும்; தென்னை மட்டை அவர் முதுகுல போர்ஸா விழணும். தரதரன்னு சசி சாரை இழுத்துட்டுப் போகணும். உதைச்சு பாத்ரூம்ல தள்ளணும்” என காட்சிகளை விளக்கினேன். ஊர்க்காரர்களே ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். “எல்லாம் சரி சார்... ஆனா அந்த பாத்ரூம் உள்ளே தள்ள வேணாம்... அது பதினஞ்சு குடும்பங்க பொழங்குற கக்கூசு..” என்றார்கள். “பரவாயில்ல... அதுலயே என்னைய புடுச்சு தள்ளுங்க... என்னைய பத்திரமா பார்த்துக்குறேன்னு பத்து டேக் எடுக்க வைச்சிராதீங்க” என்றார் சசி சார். 

க்ளைமாக்ஸ் காட்சிகள் படமான போது சசிகுமார்(Sasikumar) சாரிடம் பேசுவதையே நான் தவிர்த்தேன். என் உதவியாளர்கள் மூலமாகவே சேதி சொல்வேன். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை எடுத்து முடிக்கும் வரை நான் மிருகம். வேடிக்கை பார்த்தவர்கள்கூட என்னைத் திட்டித் தீர்த்தார்கள். சசிகுமார் சார் எதுவுமே சொல்லவில்லை. மூங்கில் கம்பு தோள் பட்டையைக் கிழித்து கொட்டியது ரத்தம். தென்னை மட்டை நடு முதுகில் விழுந்ததில் முதுகு முழுக்கக் காயமாகி, சசி சாருக்கு ஜுரம் வந்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு சசிகுமார் சாரை போய்ப் பார்த்தேன். “எடுத்த வரைக்கும் திருப்தியா வந்திருக்கா?” என்றார். “தரையில் இழுபடுகிற ஷாட் ரீ ஷூட் பண்ணனும்... பாலாஜி சார் மிதிக்கிற காட்சி செயற்கையா இருக்கு. அவர்கிட்ட நீங்களே பேசுனீங்கன்னா மிதி ஒழுங்கா வர வாய்ப்பிருக்கு” என்றேன். அடுத்த நாள் அந்தக் காட்சிகள் படமாகின. 

படத்தில் வருகிற வன்முறைக் காட்சிகளைக்கூட நான் விரும்புகிறவன் இல்லை. பிறகு ஏன் இவ்வளவு கொடூரம் எனக் கேட்கலாம். பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பலருடைய துயரக் கதைகள் இதை மிஞ்சுபவை; இன்றளவும் நடப்பவை. ‘காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா’ எனக் கேட்கிற அளவுக்கு ரிசர்வ் பஞ்சாயத்து தலைவர் மீது நடத்தப்படுகிற கொடுமைகள் எக்கச்சக்கம். இந்த நிஜங்களின் பதிவாக உருவாகும் ‘நந்தன்’ படத்தில் சசிகுமார் சாருக்காக எதையும் குறைக்க நான் விரும்பவில்லை. ஓர் இயக்குநராக நான் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்; நிறைவேற்றலாம். ஆனால், கதாநாயகனாக சசிகுமார் இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டு நின்றிருக்கத் தேவையில்லை. படத்தையே நிறுத்திவிட்டுக் கிளம்பி இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் அவர் ஏற்று நின்றார்.

நந்தன் நினைத்ததை நிகழ்த்தியிருக்கும் சூழலில் சசிகுமார் சாரை சந்தித்தேன். அவர் நடிப்பு குறித்து பலரும் பாராட்டிய வார்த்தைகளைச் சிலிர்ப்போடு சொன்னார். “உன்னை நம்பி இனி எந்தக் கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம். அப்பேற்பட்ட நடிப்புடா இந்தப் படத்துல..” என அண்ணன் சீமான் பாராட்டியதைச் சொன்னார். “என் படம் வரும் போதெல்லாம் நல்லா பண்ணியிருக்கேன்னு பல பேர் சொல்வாங்க. ஆனா, ‘நந்தன்’ பார்த்திட்டு நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க. ஒரு நடிகனுக்கு இதுதாங்க தேவைப்படுது” என என் கைகளைப் பற்றிக்கொண்டார் சசிகுமார் சார். நான் அமைதியாக நின்றேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்கிற வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். “என்னை மன்னிச்சிடுங்க சார்..” என பதிவிட்டு, சசிகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ரா சரவணன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow