நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம்..புரட்டாசியில் பெருமாள் கோவில் போக மறக்காதீங்க!

பெருமாள் கோவில்களில் வழங்கப்படும் தீர்த்தத்தில் துளசி, ஏலக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், தண்ணீர் சேர்த்து மூலிகையாக கொடுக்கின்றனர். இது வெறும் தீர்த்தம் மட்டுமல்ல நோய்களை குணமாக்கும் அருமையான மருந்து.

Sep 17, 2024 - 17:54
 0
நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம்..புரட்டாசியில் பெருமாள் கோவில் போக மறக்காதீங்க!
purattasi month thulasi theertham

சென்னை: புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுக்கு உகந்த மாதம். இந்த மதத்தில் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பல்வேறு பலன்களை  பெறலாம்.  பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும்  கொடுக்கிறார்கள்.துளசி பெருமாளுக்கு பிடித்தமானது. பிரியமான துளசியை சூடிக்கொள்கிறார். துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்கின்றனர், துளசி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்றனர். துளசி தீர்த்தத்தை பக்தர்களுக்கு கொடுக்கின்றனர்.  அதை அருந்துவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீர்வதோடு நோய் நொடிகளும் அண்ட விடாமல் நம் உடம்பிற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

 
பெரும்பாலோனோர் வீடுகளில் பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. பெருமாளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது. 


பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது. துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.துளசியில் வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை இருந்தாலும் கருந்துளசியே மிகச்சிறந்தது.  துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை.  

பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தலையில் சடாரி சாற்றி செம்பு பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்  தீர்த்தம் கொடுப்பார்கள். அதை உள்ளங்கையில் மூன்று முறை வாங்கி அருந்தும் வழக்கத்தை  பக்தர்கள் இன்றும் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் புனிதமானது பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம் மிக விஷேசமானது. சுத்தமான தண்ணீரில் ஏலக்காய், பச்சைக்கற்பூரம், துளசி இலைகள் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தரக்கூடியது. 

துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள். கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும். துளசி  உஷ்ணத்தைக் குணமாக கொண்டது. ஆனாலும் இந்த உஷ்ணம் தான் கபம் கட்டாமலும் ஜலதோஷம் மற்றும் சீதலம் தொடர்பாக மழைக்காலங்களில் வரும் நோய் நொடிகளில் இருந்தும் காப்பாற்றும். டென்சன், தலைவலி போக்கும். 

செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது. செம்புப்பாத்திரம் உடல் சூட்டை சீராக வைத்திருக்கும். துளசி சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவை போக்கும். இதய நோய்கள், சிறுநீரக கற்கள் பிரச்சினையை தீர்க்கும். தீர்த்தத்தில் பச்சை கற்பூரமும், ஏலக்காயும் தட்டிப் போடப்பட்டிருக்கும். இதற்கு கிருமிகளைக் கொல்லும் ஆன்டிபயாடிக் குணமுண்டு. மன அழுத்தம், வாய் அல்சர், நோய் கிருமி தாக்குதலையும், தோல் அலர்ஜியையும் போக்கும். 

துளசியில் பயோபிளாவினாய்டு, குளோரோபில் போன்றவை அதிகம் இருப்பதால் இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. துளசியைச் சாப்பிடுவதன்மூலம் சைனஸ், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும். தினமும் 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். 

மழை காலங்களில் நோய் நொடியில் இருந்து காக்கவே, துளசி சேர்த்த நீரைக் குடிப்பதோடு துளசி இலைகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கவே, புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் நடைமுறையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். நாளை புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போய் துளசி தீர்த்தம் வாங்கி அருந்துங்க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow