குருவாயூர் அம்பலநடையில் குவிந்த புதுமண தம்பதியினர்.. ஒரே நாளில் 354 ஜோடிகளுக்கு திருமணம்

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நேற்று ஒரேநாளில் 354 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் குருவாயூர் நகரமே ஸ்தம்பித்தது. நேற்று குருவாயூரில் எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகள் தான் காணப்பட்டனர்.

Sep 9, 2024 - 12:22
 0
குருவாயூர் அம்பலநடையில் குவிந்த புதுமண தம்பதியினர்.. ஒரே நாளில் 354 ஜோடிகளுக்கு திருமணம்
guruvayur sri krishnan temple

குருவாயூருக்கு வாருங்கள்.. ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் என்ற பாடலை பாடாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மன அமைதி தரும் ஆலயம் குருவாயூர். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உன்னி கிருஷ்ணனான அருள்பாலிக்கிறார். குருவாயூரப்பன் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார் பகவான் கண்ணன். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா என நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் வந்து செல்கின்றனர். அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். 

உலகிலேயே திருமணங்கள் அதிகம் நடைபெறும் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது குருவாயூர் கோவில். குருவாயூரப்பன் கோயிலில் வைத்து திருமணம் செய்ய பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். இக்கோயிலில் திருமணங்கள் மட்டுமல்லாமல் சோறூனு எனும் கைக்குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்வும் இங்கு பிரபலமான ஒன்றாக அறியப்படுகிறது.

சாதாரண சுப முகூர்த்த நாட்களில் 50 முதல் 100 திருமணங்கள் நடக்கும். விஷேசமான  முகூர்த்த நாட்களில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் நேற்று செப்டம்பர் 8ஆம் தேதி ஒரே நாளில் 354 திருமணங்கள் நடைபெற்றன. 

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி குருவாயூர் கோயிலில் 248 திருமணங்கள் நடந்தன. இதுதான் இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது. ஆனால் நேற்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் குருவாயூர் கிருஷ்ணனின் சன்னதி முன் 354 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே செப்டம்பர் 8ம் தேதியான நேற்று கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு முன்பதிவு செய்யத் தொடங்கினர்.

வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணி முதல் தான் திருமண சடங்குகள் தொடங்கும். ஆனால் நேற்று அதிகாலை 4 மணி முதலே சடங்குகள் தொடங்கின. திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். கோயில் வளாகத்திற்குள் 6 மணமேடைகள் அமைக்கப்பட்டன. உடனுக்குடன் திருமணத்தை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. காலை 8 மணிக்குள்ளேயே 186 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் உறவினர்கள் போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் உள்பட 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நண்பகல் 12 மணிக்குள் அனைத்து திருமணங்களும் நடத்தி முடிக்கப்பட்டன.


354 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்ததால் குருவாயூர் கோயில் நகரமே நேற்று ஸ்தம்பித்து காணப்பட்டது. லாட்ஜுகள், ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.குருவாயூரில் நேற்று எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகள் தான் காணப்பட்டனர். மணமக்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குருவாயூர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.  கூடுதல் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow