இந்தியா-வங்கதேச தொடர்.. எதில் பார்க்கலாம்?.. போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா-வங்கதேசம் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு அணி வீரர்களும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதேபோல் முதல் டி20 போட்டி குவாலியரில் உள்ள மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெறுகிறது. 2வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும், 3வது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்திலும் நடைபெற உள்ளன. டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும். டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்தியா-வங்கதேச தொடர் முழுவதையும் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் (Sports 18 Networks)சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் ஜியோ சினிமா (Jio Cinema)செயலியிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இந்தியா-வங்கதேசம் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இரு அணிகளும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 13 போட்டிகளிலும், வங்கதேசம் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணி வீரர்கள் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யஷ் தயாள்.
What's Your Reaction?