மனோ மகன்கள் விவகாரம் - கேஸில் புதிய ட்விஸ்ட்
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 11ஆம் தேதி பிரபல பாடகர் மனோவின் மகன்களான ஷகீர், ரபீக் ஆகியோர் மதுபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் உள்பட இருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் நடந்த போது போலீசார் அங்கிருந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள மனோவின் மகன்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இது குறித்து தனது மகன்களை தவறாக சித்தரிப்பதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தன்னையும் தனது மகன்களையும் 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கினார்கள். இதில் நான், எனது மகன்கள் அவரது நண்பர்கள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அவர்களுக்கு அது பிரச்சனையில் முடியும் என தாய் உள்ளத்துடன் புகார் அளிக்க வேண்டாம் என இருந்தேன்.
அதேநேரம், எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. ஆனால், தொடர்ந்து எனது மகன்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதால், அவர்கள் அவமானத்தில் வெளியே சென்றிருக்கலாம். தற்போது வரை மகன்கள் எங்கு இருக்கிறார்கள் என எங்களுக்கு தெரியவில்லை. நேற்று முன்தினம் தனது மகன்களின் நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களை வழியனுப்ப தானும் எனது மகன்களும் வெளியே வந்தோம் அப்போது சிலர் எங்களையே குருகுரு என பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் தனது மகன் ஏன் பார்க்கிறாய் என கேட்டதற்கு, தகாத வார்த்தையால் பேசியதோடு, சினிமாகாரர்கள் தானே தெலுங்கு கொல்டி என கேவலமாக பேசினர்.
பின்னர் அவர்கள் 15க்கும் மேற்பட்டோருடன் திரும்பி வந்து எங்களை தாக்கினர். அப்போது நான் தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலிஸாரை வரவழைத்தோம். எனது கணவரும் நானும் பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டாம்; போலிஸில் புகார் அளித்தால் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு பிரச்சினையாகி விடும் என தாயுள்ளத்துடன் புகார் செய்யவில்லை. எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும் எனது மகன்கள் அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம்... மகன்களுக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறோம். தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும் மனோவின் மனைவி ஜமிலா வேண்டுகோள் விடுத்தார்
இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மனோவின் மகன்கள் இருவரையும், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கல், கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: தினசரி நம் பற்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்? - மருத்துவர் விளக்கம்
இந்த புதிய சிசிடிவி காட்சிகள் மூலம், மனோவின் மகன்களும் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?