Bigg Boss 8 Tamil: ஆரம்பமே அதிரடி தான்... ரஞ்சித்துக்கு தக் லைஃப்... கமலை விட விஜய் சேதுபதி சூப்பர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில், கமல்ஹாசனை விட விஜய் சேதுபதி சூப்பராக தொகுத்து வழங்குவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சென்னை: சின்ன திரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை, இந்தாண்டு விஜய் சேதுபதி ஹோஸ்டிங் செய்து வருகிறார். முதல் நாளிலேயே போட்டியாளர்களை கேள்வி மேல் கேட்டு மடக்கிய விஜய் சேதுபதி, ரசிகர்களிடம் செமையாக ஸ்கோர் செய்துள்ளார். இந்தாண்டு பிக் பாஸ் சீசன் 8 போட்டியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், ’மகாராஜா’ பட பிரபலம் சச்சனா, தர்ஷா குப்தா, தீபக், அர்னவ், ஜாக்குலின், சுனிதா கோகோய், சத்யா, விஜே விஷால், ஆர்ஜே ஆனந்தி, தர்ஷிகா, முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, அன்ஷிதா உட்பட 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விஜய் டிவி பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ரஞ்சித்தை பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகும் முன்பே சுளுக்கெடுத்து அனுப்பினார் விஜய் சேதுபதி.
மறுமலர்ச்சி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ரஞ்சித், சமீபத்தில் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் நான் சாதி வெறியன் தான் காட்டமாக பேசியிருந்தார் ரஞ்சித், அதேபோல் கவுண்டம்பாளையம் படத்திலும் நிறைய சர்ச்சையான வசனங்கள் இருந்ததாக விமர்சிக்கப்பட்டன. இதையெல்லாம் மனதில் வைத்து பேசிய விஜய் சேதுபதி, சின்ன வயதில் நான் பார்த்த ரஞ்சித், நம்பிக்கைக்குரிய நண்பன் போல இருந்தார். ஆனால் இப்போது கவுண்டம்பாளையம் பட ப்ரோமோஷனுக்காக பேசிய ரஞ்சித் வேறு ஒருவராக இருக்கிறார் என நேரடியாக குட்டு வைத்தார்.
அதேபோல், ரஞ்சித்துடன் வந்திருந்த நண்பர்கள், விஜய் சேதுபதியிடம் சாப்ட்டீங்களா எனக் கேட்டதோடு, எங்க ஊர்ல இதுதான் முதலில் கேட்போம் என்றனர். அதற்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி, உங்க ஊர்ல, எங்க ஊர்ல மட்டுமில்ல, எல்லா ஊர்லயும் சாப்ட்டீங்களான்னு தான் கேட்போம். எந்த ஊர்லயும் வெளிய போன்னு சொல்ல மாட்டாங்க என தக் லைஃப் கொடுத்தார். அதேபோல் அர்ணவ், மகாராஜ பிரபலம் சச்சனா ஆகியோரிடமும் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகிறது.
பிக் பாஸின் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள், விஜய் சேதுபதிக்கு பாஸ் மார்க் மட்டும் போடாமல், இதுதான் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹோஸ்டிங் என பாராட்டி வருகின்றனர். ஒருவேளை கமல்ஹாசனாக இருந்திருந்தால், ரஞ்சித்தின் நண்பர் சொன்னதற்கு “இதுதான் கோவையின் பெருமை” என ஊர் பெருமை பேசியிருப்பார். ஆனால், விஜய் சேதுபதி சரியான பதிலடி கொடுத்துவிட்டார் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் எவிக்சனாக சச்சனா வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தயாரிப்பாளர் ரவீந்தர் தான் முதல் வாரத்தில் எவிக்சன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை விட சச்சனாவுக்கு தான் எவிக்சன் ஓட்டுகள் அதிகம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
What's Your Reaction?