யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!
கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வனப்பகுதியை ஒட்டிய யானைகள் வழித்தடத்தில், சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், பரத சக்கரவர்த்தி சிறப்பு அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி, கோவை மதுக்கரை, கரடி மடை உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் உள்ள செங்கற்சூளைகள் செயல்பாட்டில் உள்ளது போல் தெரிவதாகக் கூறி அறிக்கை அளித்திருந்தார்.
அதேபோல தமிழக அரசுத்தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2023 ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு நவம்பர் வரை சட்ட விரோதமாக மண் எடுத்தவர்களுக்கு 119 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மண் அள்ளும் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மேலும் தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் முறையாக புலன் விசாரணை நடத்தப்பட வில்லை என அதிருப்தி தெரிவித்திருந்த நீதிபதிகள், மண் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? தோட்டப்பட்ட குழிகளை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருந்தனர்.
மாவட்ட நீதிபதி மற்றும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், மண் அள்ளப்பட்டது தொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் நாகஜோதி, செஷாங்க் சாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு, நிலுவை வழக்குகளுடன், பின்னணில் உள்ள சதி குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல, இந்த பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தானியங்கி கண்காணிப்பு நடைமுறையை உருவாக்கி, மண் கொள்ளையை கண்காணிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தோண்டப்பட்ட குழிகளை நிரப்புவது உள்ளிட்ட தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
உத்தரவை அமல்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கின் விசாரணையை, நீதிபதிகள், பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?