தலித் தலைவர்கள் படுகொலை.. தனி உளவுத்துறை அமைப்பு - திருமாவளவன் கோரிக்கை

தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Jul 6, 2024 - 21:37
 0
தலித் தலைவர்கள் படுகொலை.. தனி உளவுத்துறை அமைப்பு - திருமாவளவன் கோரிக்கை
ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருமாவளவன்

தலித் சமூகத் தலைவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தனியாக உளவுத்துறை அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இதனிடையே இச்சம்பவத்தில் 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழியாக நடைபெற்றது தெரியவந்துள்ளது. அதாவது ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் படலமாக, ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக சுரேஷின் தம்பி புன்னை பாலா தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து ஆற்காடு சுரேஷ் படுகாலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உதவியாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை, ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படும் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் திருமாவளவன் சென்றார்.

அப்போது பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், தனது வீட்டு வாசலில் கூலிப்படையினரால்  படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் சரணடைந்த குற்றவாளிகளைத் தவிர இந்த கொலைக்கு காரணமான மற்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதை காவல்துறை கண்டிப்பாக ஒடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு கியூ பிரான்ச் இருப்பது போன்று, தலித் தலைவர்களை படுகொலை செய்யும் சமூக விரோதிகளை ஒடுக்க தனி உளவுத்துறை அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கட்சியின் தலைவர் வீட்டு வாசலில் படுகொலை செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கக்கூடிய செயல் என்று தெரிவித்தார்.

கூலிப்படைகள் படுகொலை செய்வதும் அந்த படுகொலைக்கு வேறு ஒருவர் பொறுப்பேற்பதும் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்களில் கைது செய்வதும் சாதாரண வழக்கை போடுவதும் என்றும் இல்லாமல் உண்மையான குற்றவாளிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சமூக விரோதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒடுக்க காவல்துறையும் தமிழக அரசும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow