தாம்பரம், கூடுவாஞ்சேரி, சேலையூர் சார்பதிவாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பேசி வீடியோ வெளியிட்டதாக, பத்திரிகையாளரும், யூடியூபர் பிரபலமுமான கிருஷ்ணகுமார் என்கிற வராகி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் 50 லட்சம் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் வைத்திலிங்கத்துக்கு மிரட்டல் விடுத்ததாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பத்திரிகையாளர் வராகியை போலீசார் கைது செய்தனர்.
இவர் இதேபோல் தாம்பரம், சேலையூர் சார் பதிவாளர்களையும் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மயிலாப்பூர் போலீஸார், பத்திரிகையாளர் வராகி மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு வருகிற 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் வராகியால் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையை நாடி புகார் அளிக்கலாம் என பிரத்யேக எண்களுடன் சென்னை காவல்துறை வெளியிட்டது. அதன் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் உட்பட 40க்கும் மேற்பட்ட நபர்கள் யூடுயூபர் வராகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன் பேரில் வராகி மீது மேலும் மூன்று காவல் நிலையங்களில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் யூடுயூபர் வராகி மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், சென்னை காவல்துறை வராகி மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.