கள்ளக்குறிச்சி வருவதற்கு ராகுல்காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன் தாக்கு
2047ஆம் ஆண்டில் இந்தியாவை உலகத்திற்கு வழிகாட்டவும், வல்லரசாகவும் மாற்ற பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராயத்திற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை; ஆனால், ஹத்ராஸ் சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க அங்கு சென்றுள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு முன்னதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரக்கன்றை நட்டார். இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள், மறைந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள், பங்காரு அடிகளார், எம் எஸ் சுவாமிநாதன், இளையராஜாவின் மகள் பவதாரணி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய எல்.முருகன், “பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். பதவியேற்றப் பின்னர் 3 கோடி பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்குதான் முதல் கையெழுத்திட்டார். இரண்டாவது விவசாயிகளுக்கான நிதியை ஒதுக்க கையெழுத்திட்டார்.
2047ஆம் ஆண்டில் இந்தியாவை உலகத்திற்கு வழிகாட்டவும், வல்லரசாகவும் மாற்ற பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறார்.
திமுக அரசு தோல்வியுற்றுள்ளது. கூட்டணியில் உள்ளதால் கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்திற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை. ஆனால், ஹத்ராஸ் சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க அங்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பல்வேறு வகைகளில் சீர்கெட்டுள்ளது. தேசியக் கட்சியிம் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுதான் பாஜகவின் இலக்கு. அண்ணாமலை சிரமப்பட்டு பாஜகவை வளர்க்கிறார். அதற்கு பாஜக தொண்டர்கள் துணைபுரிவோம்" என்றார்.
What's Your Reaction?