'கெளரவம் வேண்டும்'.. தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.. செல்வபெருந்தகை அதிரடி பேச்சு!

Selvaperunthagai Speech : ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Jul 18, 2024 - 16:59
Jul 19, 2024 - 15:36
 0
'கெளரவம் வேண்டும்'.. தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.. செல்வபெருந்தகை அதிரடி பேச்சு!
Selvaperunthagai Speech About 2029 Parliment Election

Selvaperunthagai Speech : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது. 

''திமுக வாக்குகளால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு தனியாக வாக்கு வங்கி கிடையாது. காங்கிரஸ் தனியாக நின்றால் படுதோல்வி அடையும்'' என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும், அரசியல் நிபுணர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு விடையளிக்கும் வகையில், 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். திருவள்ளூரில் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சந்திரசேகர் உள்பட மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய செல்வபெருந்தகை, ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனியாக நின்று வெற்றி பெற போகிறது. நாடாளுமன்றத்துக்கு தமிழ்நாடு காங்கிரசில் இருந்து 19 உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்'' என்று கூறியுள்ளார்.

பின்பு கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை கூறுகையில், ''தமிழகத்தில் எனது அரசியல் பயணம் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சிறப்பு மிக்க மாவட்டமாக திகழ்ந்து  வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கலைஞர் கருணாநிதி தொடங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என வரிசையாக ஒவ்வொருவரையும் குறை கூறிக் கொண்டுதான் இருப்பார். அவர் தொடர்ந்து குறை கூற வேண்டும். அதுதான் நல்லது. ஏனெனில் அண்ணாமலை பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையினர் ஸ்காட்லாந்து காவல்துறையினருக்கு இணையானவர்கள். ஆகவே குற்றவாளிகளை யார்? ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம்? ஆகியவற்றை முழு விசாரணைக்கு பின்னர் உண்மை விவரத்தை வெளியிடுவார்கள். அதே வேளையில் தமிழகத்தில் கொலைகள் நிகழ்வதை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், 2029 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று செல்வபெருந்தகை அறிவித்துள்ளது திமுகவினர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பேசும்பொருளாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow