பச்சிளம் குழந்தையை விற்ற தாய் - 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 4, 2024 - 09:13
Nov 4, 2024 - 09:28
 0
பச்சிளம் குழந்தையை விற்ற தாய் - 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது
பச்சிளம் குழந்தை விற்பனை - 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நித்யா (28) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, ஈரோட்டில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருடன் கடந்த 2 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து அந்த குழந்தையை விற்பனை செய்ய திட்டமிட்ட அவர்கள், பானு என்ற இடைத்தரக்கருடன் கடந்த 30ஆம் தேதி நாகர்கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு, மேலும் ஒரு இடைத்தரகரான ஈரோட்டை சேர்ந்த செல்வி மற்றும் சிலரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு 4 லட்சத்து 50 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் புரோக்கர் கமிஷனாக 1 லட்சத்து 20 ரூபாயை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்துடன் ஈரோட்டிற்கு வந்த நிலையில், தாய் நித்யா குழந்தையின் நினைவாக இருந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து நித்யா அளித்த தகவலின் பேரில், அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்குமார் (நித்யாவின் ஆண் நண்பர்), இடைத்தரகர்களான பானு, செல்வி, ராதாமணி மற்றும் ரேவதி ஆகிய 5 பேரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகர்கோவிலை சேர்ந்த குழந்தையில்லா தம்பதி ஒருவருக்கு அந்த குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராதாமணி மீது ஏற்கெனவே பெங்களுரில் கருமுட்டை விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow