தமிழ்நாடு

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!
தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நீலமேகம்- வனிதா தம்பதியர்களின் மகன் கிருபாகரன். இவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அபிநயாவும் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மருத்துவர் அபிநயாவின் சீமந்த விழா மருதூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், சீமந்த விழா நடைபெறும் மண்டபம் முழுவதும், தர்பூசணி பழங்கள் ஆங்காங்கே கொட்டி ஆக்கிரமித்து கிடந்தன. அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, இது என்னடா புதுசா இருக்கே! என்றும், தர்பூசணி பழத்திற்கும், சீமந்த விழாவிற்கும் என்ன சம்பந்தம் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் விழா நடத்துபவர்கள் மூலம் உண்மை தெரிய வந்தது. தற்போது அண்மைக்காலமாக தர்பூசணி பழத்தில் ரசாயணம் கலக்கப்படுவதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருவதால், தர்பூசணி பழத்தை யாரும் பொதுமக்கள் வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதித்து, கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டுதான் சீமந்த விழாவின் நாயகர்கள் கிருபாகரன்- அபிநயா தம்பதிகள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், அதே நேரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கில் இதற்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்தனர்.

அதன்படி தமக்கு நடைபெறும் சீமந்த விழாவில், எப்போதும் நடைபெறும் விழாவாக இல்லாமல், வழக்கத்திற்கு மாறாக, வருகின்ற அனைவருக்கும் தர்பூசணி பழத்தை கொடுத்து, விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்து, சீமந்த விழாவில் வந்திருந்த அனைவருக்கும், அறுசுவை உணவை அளித்தும், பின்னர் வீட்டிற்குச் சென்ற அனைவருக்கும் தர்பூசணி பழத்தை ஒவ்வொன்றாக கொடுத்து வழி அனுப்பி வைத்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தர்பூசணி பழம் என்பது ஏழைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பழம். அதில் இயற்கையான உரங்கள் மட்டுமே பயன்படுத்தி கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் நீர்ச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. இதை உட்கொள்ளும் பொழுது உடலுக்கு சூட்டை தணித்து பல்வேறு நன்மைகள் ஏற்படும். ஆனால் தற்போது தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக கூறி வதந்தி பரவி வருகிறது. இது தவறான விஷயமாகும். அந்தந்த கால சூழ்நிலையில் விளையும் அனைத்து பழங்களையும், காய்கறிகளையும் உட்கொண்டு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் நாங்கள் தர்பூசணியை வழங்கி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இதனை செய்தோம். அதில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக சீமந்த விழாவில் தர்பூசணி வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவ தம்பதிகளின் செயல் அரியலூர் விவசாயிகள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.