சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாச பிள்ளை தெரு பகுதியில் வசித்து வருபவர் வெங்கட ரமணன். இவர் தனியார் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 4-ம் தேதி மகனை பார்ப்பதற்காக நெதர்லாந்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில் வெங்கட ரமணன் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க உள்ளே நுழைந்துள்ளனர்.வெங்கட ரமணன், சாப்ட்வேர் தொழில்நுட்பம் தெரிந்த ஐ.டி நிறுவன உரிமையாளர் என்பதால் தனது வீட்டை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சார பயன்பாட்டை ஆன்லைன் மூலம் இயக்கும் வகையில் ஆட்டோமேஷன் செய்து வைத்துள்ளார்.
இதன் மூலம் வீட்டில் இருக்கும் மின் இணைப்புகள் மற்றும் அதன் சுவிட்ச்களை செல்போனில் ஆன்லைன் மூலமாகவே ஆன் மற்றும் ஆஃப் செய்யும் வகையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளார். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் லைட்டை ஆன் செய்வதற்கு பதிலாக மோட்டாரை ஆன் செய்துள்ளார்கள். நள்ளிரவில் மோட்டார் ஆன் செய்த தகவல் நெதர்லாந்தில் இருந்த வெங்கட் ரமணனுக்கு செல்போன் மூலமாக தெரிய வந்தது. வீட்டில் ஆள் இல்லாத போது மோட்டார் எவ்வாறு ஆன் ஆனது என நெதர்லாந்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை அடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் வெங்கட சுப்பிரமணியன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததால் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்துள்ளனர். போலீஸாரை கண்டு அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் தப்பிச்சென்று அருகில் உள்ள பக்தவச்சலம் தெருவில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள் இருவரையும் அருகில் இருக்கும் போலீஸ் பூத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்(65) மற்றும் திருப்பத்துரைச் சேர்ந்த ஆரி பிலீப்(57) ஆகிய இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கைதான ஆரி பிலிப் தப்பி ஓடும் போது கம்பி கிழித்து கண்ணுக்கு அருகே அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின் கைது செய்யப்பட்ட இருவரிடமும் அசோக் நகர் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதலாவதாக கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு எதிராக இருந்த மணி அண்ட் நாராயணன் ஆடிட்டிங் அலுவலகத்திற்குள் சென்று கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர். அங்கு வெறும் லேப்டாப்புகள் மட்டும் இருந்ததால் அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர்
இதனையடுத்து தான் ஐ.டி நிறுவன உரிமையாளரான வெங்கட ரமணன் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்துள்ளனர். சுமார் ஆறு சவரன் நகை, 28 வெளிநாட்டு டாலர்கள், இரண்டு தங்க வளையல்கள், 1.5 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைத்தையும் போலீஸார் மீட்டுள்ளனர். தொடர்ந்து இந்த இரண்டு கொள்ளையர்களும் எத்தனை வீடுகளில் இதேபோன்று கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெக்னாலஜி மற்றும் சிசிடிவி காட்சியால் கொள்ளையன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்த சில மணிநேரத்தில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையர்களை கையும் களவுமாக கைது செய்ததால் காவல்துறை உயர் அதிகாரிகள், கொள்ளையர்களை பிடித்த அசோக் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
மோட்டார் சுவிட்சால் நெதர்லாந்திற்கு பறந்த தகவல்.. டெக்னாலஜியால் சிக்கிய கொள்ளையர்கள்
சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.