தமிழ்நாடு

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு: குணால் கம்ரா இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு: குணால் கம்ரா இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு
இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு

நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதையடுத்து, குணால் கம்ரா மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் தனக்கு டிரான்சிட் முன் ஜாமின் (வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு) கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தான் விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்பதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குணால் கம்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், மனுதாரர் மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கம்ராவின் வீட்டுக்கு சென்ற அவரது வயதான பெற்றோரை போலீஸார் துன்புறுத்தி உள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல்,
கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் விவரங்களையும் போலீஸார் சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி இடைப்பட்ட காலத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு குணால் கம்ராவை அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தார்.