தமிழ்நாடு

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு
ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார்.

வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளதாகவும், இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால், ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது எனவும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, விடுவிக்க கோரிய மனு மீது வாதங்களை முன் வைப்பதற்காக, விசாரணையை நீதிபதி நாளை தள்ளிவைத்துள்ளார்.