அதிமுக அமளி
டாஸ்மாக் விவகாரம் குறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பேசக்கூடாது என சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
மேலும் டாஸ்மாக் ஊழல் குறித்து தனது அனுமதி இல்லாமல் காண்பித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுகவுக்கு அச்சம்
அப்போது பேசிய அவர்,“எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள். டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும்.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால், திமுக செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நிரூபிப்போம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ரகுபதி, “டாஸ்மாக் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என நாங்கள் மனுதாக்கல் செய்யவில்லை. டாஸ்மாக் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்குமாறு தான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கை தான் வேறு மாநிலத்தில் விசாரிக்க அவர்கள் கோரினர். டாஸ்மாக் வழக்குகளை பார்த்து திமுக பயப்படவில்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
பாஜக அரசுக்கு அக்கறையில்லை
இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்னை குறித்து பேசவே இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கடிதம் மூலம் வலியுறுத்தியும் மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் பேசவில்லை. இதன்மூலம் தமிழக மீனவர்கள் மீது மத்திய பாஜக அரசுக்கு அக்கறையில்லை என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார்.
தமிழ்நாடு
டாஸ்மாக் முறைகேடு புகாரில் ஒன்றுமில்லை...இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.