இந்தியா

தொடர்ந்து மக்கள் தலையில் விழும் பேரிடி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மக்கள் தலையில் விழும் பேரிடி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கும் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. கலால் வரியானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம்? என வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயருமா? என்று சமூக வலைதளப் பக்கத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

மத்திய அரசு விளக்கம்

இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, “இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தியிருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது. கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே (PSU Oil Marketing Companies) ஏற்றுக் கொள்ளும்” என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் நிம்மதியடைந்த பொதுமக்களுக்கு, இன்னொரு அதிர்ச்சி செய்தியை அறிவித்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.

சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.803-ஆக இருக்கும் நிலையில் 50 ரூபாய் அதிகரிப்பதன் மூலம் இனி ரூ.853 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பேராதிர்ச்சியை தந்துள்ளது.