முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா 19 வயதிற்குட்பட்டோருக்கான உத்திரப் பிரதேச அணியில் இடம்பெற்று இருந்தார். தனது முதல் ரஞ்சிக்கோப்பை போட்டியிலேயே, 35 விக்கெட்டுகளையும், 225 ரன்களையும் எடுத்ததன் மூலம், இந்தியா கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனையடுத்து, 2007ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை, 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா, 32 விக்கெட்டுகளையும், 136 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 445 விக்கெட்டுகளையும், 295 டி20 போட்டிகளில் விளையாடி 315 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், எப்போதைக்குமான 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை வெளியிட்டுள்ளார். அதில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவை தொடக்க வீரர்களாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், வீரேந்திர சேவாக் 3வது இடத்திலும், 3ஆவது இடத்தில் களமிறங்கும் விராட் கோலிக்கு 4ஆவது இடத்தையும் வழங்கியுள்ளார்.
ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு 5ஆவது மற்றும் 6ஆவது இடத்தையும் கொடுத்துள்ளார். இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ்க்கு, பியூஷ் சாவ்லா தனது அணியில் இடம் வழங்கியுள்ளார்.
அதேபோல், ஹர்பஜன் சிங் மற்றும் அணில் கும்ப்ளே என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாஷ்பிரிட் பும்ரா மற்றும் ஜாகிர்கான் இருவரையும் பியூஷ் சாவ்லா தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால், நவீன இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்தவர்களில் முக்கியமானவராக கருதப்படும், சவுரவ் கங்குலிக்கு பியூஷ் சாவ்லா இடம் வழங்கவில்லை. கங்குலி இல்லையென்றால், சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் என யாருமே ஜொலித்திருக்க முடியாது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,363 ரன்கள் [22 சதங்கள், 72 அரைசதங்கள்] குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பியூஷ் சாவ்லாவின் ஒருநாள் அணி:
சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விரேந்திர சேவாக், விராட் கோலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கபில்தேவ், அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜாஸ்பிரிட் பும்ரா, ஜாகிர் கான்