ஆவணி அவிட்டம்.. பூணூல் திருவிழா.. காயத்ரி மந்திரம் கூறி சூரியனை வணங்கினால் என்னென்ன நன்மைகள்

ஆவணி அவிட்டம் என்பது பிராமணர்கள் மற்றும் தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த பூணூல் அணிபவர்கள் அதிகம் கடை பிடித்து வரும் ஒரு சடங்காகும். ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் ஆண்களால் கடைபிடிக்கப்படும் சிறப்பான வழிபாடாகும்.

Aug 19, 2024 - 08:01
 0
ஆவணி அவிட்டம்.. பூணூல் திருவிழா.. காயத்ரி மந்திரம் கூறி சூரியனை வணங்கினால் என்னென்ன நன்மைகள்
aavani avittam today

சென்னை: 

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமியோடு இணைந்து வரும் நட்சத்திரம் சிறப்பு பெறுகிறது. சித்திரை மாத சித்ரா பவுர்ணமி போல, மாசி மகம் போல ஆவணி அவிட்டம் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பிராமணர்கள் பூணூல் திருவிழா கொண்டாடுவார்கள். வட இந்தியாவில் பிராமணர் அல்லாதவரும் பூணூல் அணிவார்கள். தமிழகத்தில் கன்னட தேவாங்க செட்டியார்கள், நாட்டுக்கோட்டை செட்டியாரும் பூணூல் அணிவார்கள். ஆச்சாரி எனப்படும் நகை செய்பவரும் பூணூல் அணிவார்கள். உபநயன‌ம் செ‌ய்து பூணூல் அ‌ணி‌ந்து கொ‌ண்டவ‌ர்க‌ள்
த‌ங்களது பூணூலை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ப‌ண்டிகை ஆவ‌ணி அ‌வி‌ட்டமாகு‌ம்.

காயத்ரி மந்திரம்: 

மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமுகமாக காயத்ரி மந்திரம் கூறி குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள். சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கூறுவார்கள். 

பூணூல் திருவிழா:

ஆவணி அவிட்டம் விரதம் இருப்பதாலும், பூணூல் அணிந்து கொள்வதாலும் எவ்வித துன்பமும் அவர்களது குடும்பத்தை நெருங்காது என்பது ஐதீகம். எதிரிகள் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் மேலோங்கும் என முன்னோர்கள் கூறுவார்கள். உபநயனம் செய்து புதிய பூணூலை அணிந்த பிறகு, தினமும் காயத்ரி ஜபத்தை மூன்று வேளை தவறாமல் ஓத வேண்டும். வருடம் ஒருமுறை ஆவணி அவிட்ட நாளில், புதிய பூணூல் அணிந்துகொள்ள வேண்டும்.

வேத மந்திரங்கள்:

ரிக், யசுர்வேதங்கள் படிப்பவர்கள் இந்த நாளில் தங்களுடைய பூணூலை மாற்றிக் கொள்வது வழக்கம். சாம வேதங்கள் படிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பூணூலை மாற்றி கொள்வார்கள். பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஆற்றங்கரையிலோ அல்லது குளக்கரையிலோ குளித்து விட்டு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குழுக்களாகக் கோயிலுக்குச் சென்று அனைவரும் ஆச்சார்யரின் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொண்டு வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.

புனிதமான பூணூல்:

மகாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி மற்றும் காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம்  செய்து வைத்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இந்தச் சடங்கின் சிறப்பை உணரலாம். பூணூலை யக் ஞோபவீதம் என்பார்கள். அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம்.

காயத்ரி மந்திரம்:

ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம். இதை குருமுகமாக, குருவைக் கொண்டே செய்ய வேண்டும். வீட்டில் ஆச்சார்யர்களை வரவழைத்து, காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள். பூணூல் அணிவிக்கும்போது 
"ஓம் பூர்புவ, சுவஹ, தத் ஸவிதுர் வரோண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி,
தியோ யோந, ப்ரசோதயாத்" 

என்ற மந்திரத்தை கூறுவார்கள். காயத்ரி மந்திரத்தை நாம் தினம் மூன்று வேளை கை மேல் அங்கவஸ்திரத்தால் மூடியபடி 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை கூற வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்புக்கு நேராக வைத்து மந்திரத்தை  வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஆவணி அவிட்டம் இன்று: 

Avani avitam today: இன்றைய தினம் ஆவணி அவிட்டம் பௌர்ணமியுடன் இணைந்த நாள். பூணூல் மாற்றுவோர் இன்று சூரியனை வணங்கி தங்களின் பூணூலை புதுப்பித்துக்கொண்டனர். நாளை தினம் காலை வரை பௌர்ணமி உள்ளது. காயத்தி ஜபம் என்பதால் காலையில் பிரம்ம முகூர்த்த காயத்ரி மந்திரம் கூறி பூணூல் மாற்றிக்கொள்ளலாம்.

சௌடேஸ்வரி அம்மனுக்கு வழிபாடு: 

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளன்று பூணூல் திருவிழாவாக மார்பில் பூணூல் அணிந்து கொள்ளும் நபர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலை குல தொழிலாக கொண்டு வாழும் தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குலத்தொழிலான கைத்தறி ஜவுளி உற்பத்திக்கு தேவைப்படும் நூல்களை இடைவிடாமல் வழங்குவதற்காக வருடம் முழுவதும் மழை மற்றும் இயற்கையை காக்கும் தங்களது இஷ்ட தெய்வமான சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், நேற்று மாலை சக்தி அழைப்பு மற்றும் சாமுண்டி அழைப்பு நிகழ்ச்சியுடன் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மார்பில் கத்தியால் தாக்கியபடி, நகரின் முக்கிய வீதிகளான காட்டூர், பாண்டுரங்கர் கோவில் வீதி, ராமர் கோவில் வீதி மற்றும் சேலம் முதன்மைச் சாலை, எடப்பாடி முதன்மை சாலை வழியாக ஊர்வலமாக வந்து கத்தாள பேட்டை பகுதியில் முடிவடைந்தது. முடிவில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் அணிந்து கொள்ள பூணூல் வழங்கப்பட்டது. இன்றைய தினம் பலரும் குருவின் ஆசியோடு பூணூல் அணிந்து சூரியனை வழிபட்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow