Volcano Erupts: நிலநடுக்கத்தால் வெடித்துச் சிதறும் எரிமலைகள்.. ரஷ்யாவில் பரபரப்பு!
எரிமலை ஆவேசத்துடன் தீக்குழம்புகளை கொந்தளித்து வருவதால் 5 கிமீ சுற்றளவு வரை சாம்பல் மண்டலமாக உள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ரஷ்யாவில் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. 52.8 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 160.15 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 50 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ரஷ்யாவின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கி நகரங்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக கம்சட்கா தீபகற்ப பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்பு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை.
கம்சட்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஷிவேலுச் (shiveluch) என்ற பகுதியில் உணரப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள எரிமலை ஒன்று கடுமையாக வெடித்துச் சிதறியுள்ளது. எரிமலை ஆவேசத்துடன் தீக்குழம்புகளை கொந்தளித்து வருவதால் 5 கிமீ சுற்றளவு வரை சாம்பல் மண்டலமாக உள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ரஷ்யாவில் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதேபோல் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக குரில் தீவுகளில் உள்ள எபெகோ எரிமலையும் வெடித்துச் சிதறி தீக்குழம்புகளை கக்கி வருகிறது. குரில் தீவுகளை சுற்றி சுமார் 2.5 கிமீ வரை எரிமலையின் சாம்பல்கள் பரவி வருகின்றன. இரண்டு எரிமலைகள் வெடித்துச் சிதறி வருவதால் ஷிவேலுச் மற்றும் குரில் தீவுகளின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சிவப்பு குறியீடு (code red alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலைகள் வெடித்துச் சிதறும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வசிக்கவில்லை என்பதால் பெரிய அளவில் ஆபத்து இல்லை. கம்சட்கா தீபகற்ப பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது புதிது அல்ல. நேற்று ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளிகள் என்ற அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்தடுத்து பல்வேறு நில அதிர்வுகள் அங்கு ஏற்பட்டுள்ளன.
கடந்த 1952ம் ஆண்டு நவம்பர் மாதம் கம்சட்காவில் ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் என்ற அளவில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக 30 அடி உயர சுனாமி அலைகள் கரையை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






