விநாயகர் சதுர்த்தி கோலாகலம்.. பிள்ளையார்பட்டியில் குவியும் பக்தர்கள் - 18 படி கொழுக்கட்டை படையல்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரையில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மிக பிரம்மாண்டமான கொழுக்கட்டை செய்யப்பட்டு படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Sep 7, 2024 - 11:18
Sep 7, 2024 - 16:27
 0
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்.. பிள்ளையார்பட்டியில் குவியும் பக்தர்கள் - 18 படி கொழுக்கட்டை படையல்
vinayagar chaturthi today

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரையில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மிக பிரம்மாண்டமான கொழுக்கட்டை செய்யப்பட்டு படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடைவீதிகளில் விநாயகர் சிலை உட்பட பூஜை பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர். சென்னையில் முக்கிய வீதிகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க தமிழக முழுவதும் சென்னை முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு இரண்டு காவலர்கள் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பதட்டமான இடங்களான திருவல்லிக்கேணி, சூளை உள்ளிட்ட இடங்களை கண்டறிந்து அங்கு எஸ் ஐ தலைமையில் நான்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி சிசிடிவி காட்சிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது 

இங்கு சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதில் கற்பக விநாயகர் ஒவ்வொரு நாளும் சிம்மம், குதிரை, காளை, யானை, உள்ளிட்ட பல்லேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து கோவிலை சுற்றி திருவீதி உலா வருகிறார். இதில் முக்கிய விழாக்களான கஜமுக சூரசம்ஹாரமும் கடந்த 3 ந் தேதி நடைபெற்றது.

சதுர்த்தி விழாவின் 9 ஆம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பெரிய தேரில் உற்சவரான ஸ்ரீகற்பக விநாயகரும் அதற்கு பின்பு வந்த சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். சண்டிகேசுவரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருள்மிகு முக்குருணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து, 18 படியிலான பெரிய கொழுக்கட்டை, நெய்வேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு தீபராதனை நடத்தப்பட்டது. பிறகு வெள்ளிக்கவசம் சாத்துக்குடி செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. காலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், மஞ்சள், தயிர், இளநீர்,கரும்புச்சாறு,பஞ்சாமிர்தம்,திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் உடன் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தங்க காப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் காட்சியளித்தார் அப்போது கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow