Junior NTR : வெற்றிமாறனுக்கு ஸ்கெட்ச் போடும் ஜூனியர் என்டிஆர்... பழைய கதையில் புதிய கூட்டணி..?
Actor Junior NTR Wants Act with Vetrimaaran Direction : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் விருப்பம் தெரிவித்துள்ளதால், விரைவில் முக்கியமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actor Junior NTR Wants Act with Vetrimaaran Direction : தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் ஜூனியர் என்டிஆர். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் இடம்பிடித்த ‘நாட்டு நாட்டு’ பாடல், ஆஸ்கர் விருதையும் வென்றது. ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவாரா திரைப்படம், வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் ஜானர் மூவியாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, டோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகவுள்ள தேவாரா, முதல் பாகம் தான். இதனைத் தொடர்ந்து தேவாரா 2-ம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தேவாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜூனியர் என்டிஆர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை என தனது விருப்பத்தை கூறினார்.
இதுகுறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, “தமிழ் இயக்குநர்களில் வெற்றிமாறனை ரொம்பவே பிடிக்கும், அவரது இயக்கத்தில் நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசை” என்றார். ஏற்கனவே வெற்றிமாறன் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அதாவது ஜூனியர் என்டிஆருக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கதை கூறியிருந்ததாகவும், அதில் நடிக்க அவரும் ஆர்வமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. வெற்றிமாறன் இயக்கியதில் அசுரன் தான் ஜூனியர் என்டிஆருக்கு ஃபேவரைட் படமாகும்.
இதுகுறித்து ஜூனியர் என்டிஆரும் சில மேடைகளில் பேசியிருந்தார். அதனால், அசுரன் போல கதையம்சம் கொண்ட ஒரு கதையை வெற்றிமாறன் கூறியதாகவும், அது ஜூனியர் என்டிஆருக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், விடுதலை, வாடிவாசல் என வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்து படங்கள் இருந்ததால், ஜூனியர் என்டிஆர் படம் குறித்து முடிவாகவில்லை எனத் தெரிகிறது. அதேநேரம், விஜய்க்காக வெற்றிமாறன் ரெடி செய்திருந்த கதையை தான், ஜூனியர் என்டிஆருக்கு சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெற்றிமாறன் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி இணைந்தால், அது செம மாஸ்ஸான மூவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வெற்றிமாறனும் ஜூனியர் என்டிஆரை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம். எனவே வாடிவாசலுக்குப் பின்னர் இக்கூட்டணி குறித்து அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் எத்தனையோ பிரம்மாண்ட இயக்குநர்கள் இருக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளது திரையுலகில் வைரலாகியுள்ளது.
What's Your Reaction?