இந்திராவுக்கு நேர்ந்த கதிதான் ராகுலுக்குமா? - பதறிய மு.க.ஸ்டாலின்.. பாஜவுக்கு கண்டனம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் இடஒதுக்கீடு தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவர் பேசிய கருத்துக்கு ஆளும்கட்சியான பாஜக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாஜக தலைவர் தர்வீந்தர் சிங் மார்வா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் உயிருக்கு அச்சுற்றுத்தும் விதமாக மிரட்டல் விடுத்து இருந்தார். “பாட்டி இந்திரா காந்திக்கு நேர்ந்த கதிதான், ராகுல்காந்திக்கும் நேரும்” என்று கூறியிருந்தார்.
அதேபோல ஷிண்டே சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட், “காங்கிரஸ் கட்சி 400 ஆண்டுகாலம் நமது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. நாட்டிலிருந்து இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக பேசியதன் மூலம், காங்கிரஸின் உண்மையான முகத்தைக் காட்டியுள்ளார். ஆகையால், ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் ரூ.11 லட்சம் பரிசு தருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
பாஜக மற்றும் சிவசேனா கட்சியினரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுத்த பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. அஜய் மக்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியும், ராகுல்காந்தியுடன் நெருக்கமாக இருப்பவருமான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், “பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ராகுல் காந்தி ‘அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும்’ என்றும் நாக்கை அறுத்துவிடுவேன் என்று ஷிண்டே சேனா எம்.எல்.ஏ. கூறியுள்ளனர்.
எனது சகோதரர் ராகுல் காந்தியின் கவர்ச்சியும், பெருகிவரும் மக்கள் ஆதரவும் பலரைத் தெளிவாக அமைதிப்படுத்தியுள்ளது. இதனால், இது போன்ற கீழ்த்தரமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?