மகாளய பட்சம் ஆரம்பம்..வீடு தேடி வரும் முன்னோர்கள்.. தர்ப்பணம் அளித்தால் தடைகள் நீங்கும்

பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசைக்கு முன்பு வரை மகாளய பட்ச காலமாகும. தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே மஹாளய பட்சமாகும். இன்று முதல் மாஹாளய பட்ச காலம் ஆரம்பமாகிறது.

Sep 18, 2024 - 12:37
 0
மகாளய பட்சம் ஆரம்பம்..வீடு தேடி வரும் முன்னோர்கள்.. தர்ப்பணம் அளித்தால் தடைகள் நீங்கும்
mahalaya patcham

சென்னை: மகாளய பட்ச காலமான 15 நாட்களும் நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் பூமிக்கு வந்து  சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இன்று முதல் மகாளய பட்ச காலம் தொடங்கியுள்ளது. மகாளய பட்ச காலம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.

மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம், தேவரயக்ஞம், பூதயக்ஞம், மனித யக்ஞம்,வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன்
நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.  முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பணமுறை அமைந்துள்ளது. இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு நமது குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள்.

நம்முடைய முன்னோர்களுக்கு பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்டமகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன்,அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
பித்ரு வழிபாட்டால் முன்னோர்கள் ஆசியுடன் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.  

ஒருவருக்கு ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இருந்தாலும் அந்த யோகங்களின்  பலனை  அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இந்த துன்பங்கள் தீர பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். 

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை
செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

அமாவாசை தினத்தில் நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை. காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி , கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புஹார், வேதாரண்யம், கொடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம்  செய்யாதவர் கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும் இதன் மூலம் மூன்று தலைமுறை காலத்தில் செய்திருந்த பாவங்கள் நீங்கும் காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow