மதுரையில் பெருகிய வைகை.. கரை அடைக்க வந்த இறைவன்.. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு ஆடிய லீலை

மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணி மூல நாளிலே ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். ஏழை முதியவளுக்காக பிட்டுக்கு மண் சுமந்தததும், மாணிக்கவாசகரின் பக்தியை உணர்த்த நரிகளை பரிகளாக்கியதும் ஆவணி மூலத்தில் ஆடிய திருவிளையாடலாகும்.

Sep 13, 2024 - 17:38
 0
மதுரையில் பெருகிய வைகை.. கரை அடைக்க வந்த இறைவன்.. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு ஆடிய லீலை
madurai puttu festival aarapalayam puttu thoppu

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள புட்டு தோப்பில் உள்ள புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில் வருடந்தோறும் புட்டுத் திருவிழா பிரமாண்டமாக நடைபெறுகிறது மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆவணி மூல திருவிழா சித்திரை திருவிழா மதுரை மக்கள் கொண்டாடும் திருவிழா என்றால் ஆவணி மூல திருவிழா ஈசனின் அடியார் பெருமக்கள் கொண்டாடும் திருவிழா என்றே கூறலாம்  அத்தகைய பிரசித்திபெற்ற திருவிழா இன்று(13.09.24) வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

மதுரையை அரிமர்த்தனபாண்டியன் ஆண்டு வந்தான். அந்தச் சமயம் அரசாங்க நிதி கொடுத்து குதிரை வாங்கி வந்த எம்பிரான் மணிவாசகபெருமான் அழைத்து வந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாற,கோபம் கொண்ட மன்னன் மணிவாசகரை தண்டிக்க வைகை ஆற்றின் சூடு நிற்க வைத்து தண்டனை கொடுத்தார்.

சுவாமி சோமசுந்தரப் பெருமான் தனது திருவிளையாடலை அங்கு அரங்கேற்றும் பொருட்டு, வைகை நதியில் வெள்ளம் கரை புரண்டோடச் செய்தார்.வானளாவிப் பெருகி வரும் வைகை ஆற்று வெள்ளம், கரையை உடைத்துக்கொண்டு மதுரையை அழிக்கும் அபாயம் ஏற்பட்டதால், பாண்டிய மன்னன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையில், வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகைக் கரையை வலுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மதுரை நகரின் கீழ்த் திசையில் வசித்து வந்த 'வந்தி’ என்னும் மூதாட்டி. இவள் பிட்டு சுட்டு விற்கும் தொழில் செய்பவள். முதலில் சோமசுந்தரக் கடவுளுக்குப் பிட்டைப் படைத்துவிட்டுப் பின்னர்தான் ஏனையோருக்கு விற்பனை செய்துவந்தாள். வைகைக் கரையை வலுப்படுத்த மன்னன் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவர் சென்றனர். வந்தி, 'தனக்கு யாரும் இல்லையே’ என்று சோமசுந்தரக் கடவுளை நினைத்துக் கண்ணீர் மல்கினாள்.

அடியவர்க்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய பிட்டுக்கு மண் சுமக்கும் கூலி ஆளாய் வந்தியிடம் வந்து சேர்ந்தார். கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு வந்தார்.

வைகைக் கரைக்கு வந்த  இறைவன், மண் சுமந்து கரையை வலுப்படுத்தாமல், நீரில் குதித்தும், மற்றவர்கள் சுமந்து வரும் மண்ணைக் கீழே தள்ளிவிட்டும், ஆடியும், பாடியும் தனது விளையாட்டைத் தொடங்கினார். இதைக் கவனித்த காவலர்கள், 'இவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டதோ?’ என நினைத்தனர். உடனடியாக மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

அதற்குள் கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே தனது கையில் இருந்த தங்க பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார்.இறைவன் மீது பட்ட பிரம்படி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. இந்திராதி தேவர்களையும் அந்த அடியின் வலி விட்டு வைக்கவில்லை. எல்லா உயிர்களுக்கும் அந்த அடி விழுந்தது.

அதன் பிறகு மறைந்துபோன இறைவன், நந்தி முதலிய கணாதிபர்களுடன் வானத்தில் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளைத் தன்னோடு வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் இந்தத் திருவிளையாடலைக் கண்ட மன்னனும்  மக்களும் இறைவனை வணங்கி நின்றனர்.  மணிவாசகப் பெருமானை சிறையிலிருந்து விடுவித்தான் பாண்டிய மன்னன்.  

பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று ஆரம்பாளையம் புட்டுத்தோப்பில் உள்ள சிவ ஆலயத்தில் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. எராளமான பக்தர்கள் இந்த லீலையை தரிசனம் செய்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow