Ezhai Katha Amman Temple : சிறுமிகளை தெய்வமாக வழிபடும் மக்கள்.. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா

Ezhai Katha Amman Temple in Madurai : மேலூர் அருகே 62 கிராம மக்கள் முன்னிலையில் 7 பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்ந்தெடுத்தனர். வெள்ளலூரில் உள்ள ஏழை காத்த அம்மன் கோவில் வீட்டில் பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்வு செய்தனர்.

Sep 17, 2024 - 12:40
Sep 17, 2024 - 12:52
 0
Ezhai Katha Amman Temple : சிறுமிகளை தெய்வமாக வழிபடும் மக்கள்.. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா
ezhai katha amman temple festival in madurai

Ezhai Katha Amman Temple in Madurai : மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏழைகாத்த அம்மன் கோவில் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. 7 பெண்குழந்தைகளை பாரம்பரிய முறைப்படி  தெய்வங்களாக தேர்வு செய்துள்ளதால் 62 கிராம மக்களும் 15 நாட்களுக்கு கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளனர். எதற்காக இந்த பெண் குழந்தைகளை தெய்வங்களாக தேர்வு செய்கின்றனர் என்பதற்கு சுவாரஸ்ய காரணம் உள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் விதவிதமான வழிபாட்டு முறைகள் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பிரபலமான அலகுகுத்துதல், தீமிதித்தல், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற அனைவருக்கும் தெரிந்த வழிபாட்டு முறைகளைத் தவிர, பல விநோதமான பழக்கவழக்கங்களும் சில கோயில்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

மேலூர்(Melur) அருகே உள்ள வெள்ளலூரை தலைமையிடமாகக் கொண்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிக்காரர் சுவாமியும், ஏழை காத்த அம்மனும்(Ezhai Katha Amman Temple) இப்பகுதி மக்களின் காவல் தெய்வங்களாக உள்ளன. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். 

இந்த ஆண்டுக்கான விழாவானது பாரம்பரிய முறைப்படி இன்று தொடங்கியது. வெள்ளலூர், உறங்கான்பட்டி,  குறிச்சிபட்டி, அம்பலகாரன்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட 5 மாகாணங்களை உள்ளடக்கிய 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளலூரில் உள்ள ஏழை காத்த அம்மன் கோவில்(Elai Kaththa Amman Temple) அருகே ஒன்று கூடினர். தங்களது பெண் குழந்தைகளை அம்மன் போல அலங்காரம் செய்து அழைத்து கோவில் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். 

இதனைதொடர்ந்து, கிராம நாட்டார்கள் என்று அழைக்கக்கூடிய கிராம அம்பலகாரர்கள் முன்னிலையில் கோவில் பூசாரி சின்னதம்பி அம்மனாக வழிபாடு செய்வதற்கு 7 சிறுமிகளை  தேர்ந்தெடுத்தார்.இன்றிலிருந்து அம்மனாக தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமிகளும், கோவில் வீட்டில் இருந்து 15 நாட்களும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொது மக்களுக்கு ஆசி வழங்குவார்கள் அப்போது, கிராமமக்கள் குழந்தைகளுக்கு கணிக்கையாக பழம், ரொட்டி, வளையல், உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வழங்குவார்கள்.இதனைத் தொடர்ந்து வரும் 01ஆம் தொடங்கி 3 நாட்கள் முக்கிய திருவிழா கொண்டாடப்படுகின்றது.

இதனைதொடர்ந்து வரும் 15 நாட்களும் இந்த 62 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டட வேலை செய்தல், பள்ளம் தோண்டுதல், பச்சை மரம், வெட்டுதல், அசைவம் உண்ணுதல், எண்ணெய் பலகாரம் செய்தல் போன்ற எந்த காரியமும் செய்யாமல் கடுமையாக விரதம் மேற்கொள்வார்கள். அதே போல் இக்கிராமத்தைத் சேர்ந்தவர்கள், வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்டவற்றில் இருந்தாலும் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள் என்பதுதான் சிறப்பம்சம். 

அக்டோபர் 01ஆம் தேதி வெள்ளலூர் கோவில் வீட்டில் இருந்து தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் திருவிழாவின் போது பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மண் பொம்மைகளை சுமந்து வருவார்கள். திருமணமான பெண்கள் மண்கலையங்களில் பாலை ஊற்றி அதில் தென்னை மர குருத்துக்களை வைத்து அலங்கரித்து மதுக்கலயமாக சுமந்து வருவார்கள். இந்த ஊர்வலத்தில் பெரிய அம்பலகாரர் பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் குடைபிடித்து அழைத்து செல்லப்படுவார். அதனை தொடர்ந்து 7 சிறுமிகளும் அம்மன்களாக அலங்கரிக்கப்பட்டு ஆசி வழங்கியபடி வருவார்கள்.அக்டோபர் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.ஏழை காத்த அம்மன் கோவில் விழா(Elai Kaththa Amman Temple) கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow