வரும் அக்டோபர் 2 ஆம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆகவே தான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்த உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக, அதிமுக உட்பட மதுவை ஒழிக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பாஜகவும் பாமகவும் சாதியை விட்டுக்கொடுக்காத கட்சிகள் என்பதால் அக்கட்சிகளை தான் அழைக்கவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருமாவளவன் போலி டுபாக்கூர் மதுபான ஒழிப்பு மாநாடு நடத்த போவதாக நாடகமாடுகின்றார் என மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டியில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பாம்பாட்டி சித்தர் ஆலயத்தில் பாஜக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “NIA யால் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டது, காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில் குறைவு என்றும், கோயமுத்தூர்,சத்தியமங்கலம் பகுதிகளில் NIA சோதனை செய்து பல தீவிரவாத நடவடிக்கைகளை தமிழகத்தில் நடைபெறாமல் தவிர்த்து இருக்கிறது. அமலாக்கத்துறை தமிழக அரசு அதிகாரிகளை மணல் கடத்தலில் ஈடுபட்டதை வெளிக்கொண்டு வந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் போலி டுபாக்கூர் மதுபான ஒழிப்பு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் சாராய ஆளை அதிபர்களும், டாஸ்மாக்கில் இலக்கு வைத்து சாராயம் விற்பனை செய்யும் தமிழக ஆட்சியாளர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இது ஒரு நாடக மது ஒழிப்பு மாநாடு.
மேலும் படிக்க: Arvind Kejriwal : டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் தான் ஜாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க முடியும். ஆனால் ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்க கூறும் அமைப்பினர் மற்றும் கட்சியினர் மக்கள் தொகை கணக்கெடுப்பையே எதிர்க்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகும்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியபோது மாநில அரசு இடம் கையகப்படுத்துவதில் தாமதப்படுத்தியதால், அந்த நிதி பிற மாநிலங்களுக்கு சென்று விட்டது. தற்போது கடன் பெற்று பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திமுக அரசியல்வாதிகள் நடத்தும் சாராய ஆலைகளை மூடினாலே மது ஒழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சமீபத்தில் இரு கோயில் யானைகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயில் யானைகளை பராமரிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும் என மக்களிடத்தில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில், கேள்வித்தாள் வெளியானது எப்படி என்பது தெரியவில்லை. ஆனால் பதிலை முன்கூட்டியே அவர் எழுதி வைத்து படித்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டிற்கான வெள்ளை அறிக்கையை பாஜக கடந்த முறை கேட்டபோதும் வழங்கவில்லை, இந்த முறையும் வரப்போவது இல்லை” எனக் கடுமையாக சாடியுள்ளார்.