Arvind Kejriwal : டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

Delhi CM Arvind Kejriwal Resignation : துணை நிலை ஆளுநரை சந்தித்து டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ளார்.

Sep 17, 2024 - 17:06
Sep 17, 2024 - 17:28
 0
Arvind Kejriwal : டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
delhi cm arvind kejriwal resign

Delhi CM Arvind Kejriwal Resignation : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஜூலை மாதமே ஜாமின் கிடைத்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த 13ம் தேதி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

உச்ச நீதிமன்றம் தனது ஜாமின் உத்தரவில், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்தது. இதனால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. 

இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அடுத்த 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். நேர்மையானவன் என மக்கள் தனக்கு சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாகவும் கூறி உள்ளார் கெஜ்ரிவால்.

இதனிடையே டெல்லி துணை நிலை ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்த நிலையில் இன்று  சந்திப்பு நடந்துள்ளது. துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ளார். 

மேலும் படிக்க : டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு

முன்னதாக டெல்லியில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர் அதிஷி பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷி ஒருமனதாக புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய முதல்வர் அதிஷி தேர்வு குறித்த முடிவு ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டு ஆட்சியமைக்க உரிமை கோரப்படும். இதன் பின்னர் புதிய முதல்வர் அதிஷி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவரங்கள் வெளியாகும்.டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்கும் பட்சத்தில் அம்மாநிலத்தின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow