18,000 பெண் ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம்.

Aug 17, 2024 - 20:19
Aug 17, 2024 - 20:21
 0
18,000 பெண் ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
Women Staff Hostel

சென்னை: தமிழ்நாடு அரசின் சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் பகுதியில் ரூ.706.50 கோடி செலவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை சேர்ந்த பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் பிரம்மாண்ட விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு, டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரம்மாண்ட விடுதியை திறந்து வைத்து பின்பு சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ''தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் உலகத்திலேயே மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனமாக விளங்கி வருகிறது.

 ஃபாக்ஸ்கான்  ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு உற்பத்தி ஆலைகளை நிறுவி இருப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும். ரூ.2,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலைகளில் 41,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 35,000 பேர் பெண்கள். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில்தான் அதிக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 39,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம் உருவாகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 

நமது தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்குகளை கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என ஒரு லட்சிய இலக்கை நான் நிர்ணயித்துள்ளேன்'' என்றார்.

இந்த விழாவில் பேசிய  ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு, ''இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் குடியிருப்பு சென்னையில் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனையாகும்'' என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம். இந்த குடியிருப்பின் ஒரு தொகுதியில் 240 அறைகள் உள்ளது. மொத்தம் 13 தொகுதிகளில் 3,120 அறைகள் உள்ளன.

டார்மென்டரி  முறையில் ஒவ்வொரு அறையிலும் ஆறு பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியின் முதல் தளத்திலும் 4,000 பேர் அமரும் வகையில் உணவு அருந்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளரங்கம் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளுக்கான இடங்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி, திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பெண் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 1,170 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வளாகம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow