தமிழ்நாடு

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்
டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசின் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். சுரங்கம் அமைய உள்ள இடம் பல்லுயிர் பெருக்கத்தலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

தொடர்ந்து, மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் மத்திய அரசு வழங்கக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, கலாச்சாரத்தை அழிக்கும் வேலைகளை மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிரான தீர்மானத்தை பேரவையில் கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள். மனிதர்களுக்கு உடல் ரீதியாக அதிபயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மோசமான ஒரு திட்டம் இது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.