பெரியார் பேரன் முதல் காங்கிரஸின் நம்பிக்கை வரை... ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருடைய அரசியல் பயணம் குறித்து பின்வரும் தொகுப்பில் காணலாம்.

Dec 14, 2024 - 12:22
 0
பெரியார் பேரன் முதல் காங்கிரஸின் நம்பிக்கை வரை... ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்க்கையும், வரலாறும்.. ஒரு கண்ணோட்டம்..!

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், சிவாஜியை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டதோடு, காங்கிரஸ் கட்சியிலும் தன்னை ஐக்கியமாக்கி கொண்டார்.  1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இவர், திமுக வேட்பாளர் டி.கே.சுப்ரமணியம் பெற்ற வாக்குகளைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று அபார வெற்றிப் பெற்றிருந்தார். 

எம்.ஜி.ஆரின் மரணத்தைத் தொடர்ந்து, அதிமுக பிளவை சந்தித்தபோது ஜானகி அணிக்கு ஆதரவாக களமிறங்கினார் சிவாஜி. அதோடு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜானகி அம்மையாரை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமைக்கு சிவாஜி கோரிக்கை வைத்தார். ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவையே நாங்கள் ஆதரிப்போம் என்று கூறி, சிவாஜியின் கோரிக்கையை டெல்லி காங்கிரஸ் நிராகரித்தது. இதனால் கடுப்பான சிவாஜியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர். 

கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி, தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார்.  அதில் காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏக்களும் இணைந்தனர். 1989 ஆம் ஆண்டு சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அந்தத் தேர்தலில் இளங்கோவனுக்கு நான்காம் இடமே கிடைத்தது. 

தேர்தல் தோல்விக்கு பிறகு சிவாஜி கணேசன் தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துவிட்டார். ஜனதா தளத்துடன் சிவாஜி கணேசன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்த போதும் கூட, இளங்கோவன் அதிலிருந்து பிரிந்து தனது தாய் கட்சியான காங்கிரஸிலேயே மீண்டும் இணைந்தார்.  அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தியின் பிரிவினராக தலைமை ஏற்று செயல்பட்டார்.

ஒருபக்கம் காங்கிரஸில் மீண்டும் ஐக்கியமானாலும், மறுபக்கம் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த விரக்தியோ என்னவோ, அதன்பிறகு அவர் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவே இல்லை. பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வந்தார்.  

1996 நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் இளங்கோவன். அத்தேர்தலின் தோல்விக்கு முன்பே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப.சிதம்பரம் ஆகியோர் பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சி உடன் முரண்பட்டு தனி கட்சி துவங்கி சென்றுவிட்டனர். இதனால் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்தனர்.

1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட இளங்கோவன், 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி ஆனார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார். மேலும் அக்காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்த போதும் தமிழகத்தில் கூட்டணி கட்சி தலைமையான திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார் இளங்கோவன். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு சரியான மரியாதை தராததை காரணம் காட்டி கருணாநிதியை அவரது சாதியின் பெயரோடு குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். 

அதுமட்டுமல்லாமல், 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போதிலும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் போனதை வைத்து திமுக –காங்கிரஸ் கூட்டணி தயவில் ஆட்சி செய்வதை வைத்து முதல்வர் கருணாநிதியின் ஆட்சி, திறனற்ற ஆட்சி என்று கூறி, கூட்டணி கட்சி என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்தார் இளங்கோவன். அதைவிட எதிரணியில் அதிமுக ஜெயலலிதா ஆதரவாளனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

மேலும் அப்போது கருணாநிதியின் எதிர்ப்பை கையில் எடுத்த தேமுதிக கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்தை பாராட்டி அவரை வீடு தேடி சென்று இனிப்பூட்டி மகிழ்ந்தார் இளங்கோவன்.  2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், தோல்வியையே தழுவினார். அதற்கு காரணம் கூட்டணிக் கட்சித் தலைவர் என்று கூட பாராமல் அவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறினர். 

தொடர்ந்து 2014–2017 வரையிலான காலகட்டத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று கொண்டார். பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் 41 தொகுதிகளை அன்றைய திமுக தலைவர் கருணாநிதியிடம் மிகவும் கட்டாயம் செய்து வாங்கினார். எல்லாவற்றையும்விட அப்போது தேர்தல் காலத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைத்து இவர் தவறாக பேசிய சர்ச்சை தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் காங்கிரசுடன் இணைந்து திமுகவும் அத்தேர்தலில் தோல்வி அடைவதற்கு இவரே காரணமாக அமைந்தார் என்று கூறப்பட்டது. தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். 

2023 ஆம் ஆண்டு ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரது மூத்த மகன் திருமகன் ஈவேரா அகால மரணம் அடைந்த நிலையில், ஈரோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கிட்டதட்ட 39 ஆண்ட்டுகள் கழித்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட இளங்கோவன் அபார வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 

இந்த நிலையில், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நல குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை மேற்கொண்ட சிகிச்சை பலனின்றி தனது 76வது அகவையில் இயற்கை எய்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow