சென்னைக்கு கருணை காட்டிய வருண பகவான்.. கடும் காற்றுடன் வெளுத்துக் கட்டிய கனமழை!

தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டியது. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என்று சென்னை மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.

Aug 30, 2024 - 21:29
Aug 31, 2024 - 10:09
 0
சென்னைக்கு கருணை காட்டிய வருண பகவான்.. கடும் காற்றுடன் வெளுத்துக் கட்டிய கனமழை!
Heavy Rain In chennai

சென்னை: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டியது. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என்று சென்னை மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னை புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர் புதுப்பேட்டை, கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் கோயம்பேடு, வளசரவாக்கம், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சில இடங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் சிரமம் அடைந்தனர. இதேபோல் சென்னை புறநகரின் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்துக் கட்டியது.

சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, மலையம்பாக்கம், காட்டுப்பாக்கம், ஐயப்பாந்தாங்கல்,செம்பரம்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் புறநகர் மாவட்டமான திருவள்ளூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், கடம்பத்தூர், திருப்பாச்சூர், மணவாளநகர், அரண்வாயல், ஜமீன்கொரட்டூர், திருமழிசை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow