ரூ. 3.08 கோடி செலவில் புதிய திட்டம்... ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
ரூ. 3.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ், விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் தமிழகம் முழுவதும் திறக்கப்பட உள்ளது. முதல் மையம், சென்னை மாநகராட்சி, 196-வது வார்டு, கண்ணகி நகரில் ரூ. 3.08 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 195வது வார்டு, எழில்நகரில் மாநகராட்சி நடுநிலை பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 69 லட்சம் ரூபாயில், ‘மாண்டிசோரி’ முறையில் பாடம் நடத்தும் திட்டக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களின் தொடக்க விழாவும் மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்ணகி நகர் பகுதிக்கு நேரடியாக வருகை தந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “பெருமழை வருகின்றதோ? வரவில்லையோ? அதை நாங்கள் எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தமிழகத்திற்கு தேவையான நிதி திட்டங்கள் குறித்து நிச்சயம் கேள்வி எழுப்புவோம். நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து எந்தெந்த கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அதானி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற முதல்வர் ஸ்டாலின், மீண்டும் வந்து இது குறித்துத் துறை அமைச்சர்கள் கூறுவார்கள் என்றார். மேலும், ராமதாசுக்கு வேற வேலை இல்லை, அவர் தினமும் ஒரு அறிக்கை வெளியிடுவார், அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை எனத் தெரிவித்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வரும் சாலையெங்கும் திமுகவினர் கொடிகள், பலூன்கள், வரவேற்பு பதாதைகள் மூலம் முதல்வருக்கு பலத்த வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?