ஆங்கில புத்​தாண்டு.. கோயில்​கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில்,  சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 

Jan 1, 2025 - 09:26
Jan 1, 2025 - 09:59
 0
ஆங்கில புத்​தாண்டு.. கோயில்​கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!

2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டு நாட்களில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வது வழக்கம் அதேபோல், இந்த ஆண்டும் நாளும் அதிகாலை, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வடபழனி முருகன் கோயிலில் திருப்பள்ளி எழுச்சி பாராயணம் செய்யப்பட்டது. சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில். ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருவறையில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல், தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பத்மாவதி தாயார் சந்நிதானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர், சீனிவாசப் பெருமாள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருவொற்றியூர் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.

அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக சென்னையில் உள்ள பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ தேவாலயத்தில் காலை முதலே பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மாதவை வழிபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து தங்கள் குடும்பங்களுடன் சாந்தோம் தேவாலயத்தில் இறைவனை வழிபட்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், கதீட்ரல் பேராலயம், மிகவும் பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடந்த சிறப்பு ஆராதனையில் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கோயில்கள், தேவாலங்கள் மட்டுமில்லாது சுற்றுலா தளங்களிலும் ஏராளாமானோர் குவிந்து வருவதால், புத்தாண்டை பாதுக்காப்பாக கொண்டாடும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow