சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்...!
புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் திரண்ட நிலையில், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆங்கில வருடமான 2024-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2025-ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது. இந்த புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகமெங்கும் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். புது வருடத்தை வரவேற்கும் விதமாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஒருபுறம் கலைக்கட்டினாலும், மறுபுறம் விடுமுறை நாட்கள் என்பதால், கோயிலில் வழிபாடு செய்து ஆண்டின் தொடக்கத்தை வரவேற்று வருகின்றனர். சுற்றுலா தளங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது. மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்துக்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. அதனையே சுற்றுலா பயணிகளால் பார்க்க முடிந்தது.கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
What's Your Reaction?