Independence Day 2024 : சென்னை கோட்டை கொத்தளத்தில் 4வது முறையாக தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM Stalin Host Flag on Independence Day 2024 in Chennai : 78வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Aug 15, 2024 - 11:04
Aug 15, 2024 - 12:12
 0
Independence Day 2024 : சென்னை கோட்டை கொத்தளத்தில் 4வது முறையாக தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
CM Stalin Host Flag on Independence Day 2024 in Chennai

CM Stalin Host Flag on Independence Day 2024 in Chennai : நாடு முழுவதும் 78வது சுதந்திரதின கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதையடுத்து, முப்படையினரும் காவல்துறை சார்பிலும் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது முறையாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 

இந்த வண்ணமிகு விழாவில், சபாநாயகர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சுதந்திரதின விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்கப்பட்டது. அதேபோல், சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். மேலும், இந்தாண்டு சிறந்த உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி. நகராட்சி, பேருராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த மாநகராட்சியாக கோவைக்கும், சிறந்த நகராட்சியாக திருவாரூருக்கும், சிறந்த பேரூராட்சியாக கோவை மாவட்டத்தில் உள்ள சூலூருக்கும் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், வயநாடு நிலச்சரிவின் போது துணி்ச்சலாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இதேபோல் நல்லாளுமை விருதுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சுதந்திரத்திற்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் என்றார். மேலும், மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனக்கூறிய அவர், 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதற்கு பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், தேசிய கொடி என்பது பன்முகத்தின் அடையாளம் என்றும், விடுதலை என்பது எளிதாக கிடைக்கவில்லை, 300 ஆண்டுகள் போராட்டதின் பின் தான் கிடைத்தது எனவும் கூறினார். சுதந்திரத்திற்காக(Independece Day) போராடிய வீரர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் எனக் கூறிய அவர், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 20,000 ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். பெண்களை முன்னெற்றுவதற்காகவே விடியல் பயணம், புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், காலை உணவு திட்டத்தால் 20 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவதாகவும் கூறினார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு, மக்கள் மருந்துகளுக்காக அதிகம் செலவழிக்கும் நிலையில், அவற்றை மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்ய இந்தத் திட்டம் தொடங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இந்த திட்டத்தின் கீழ் மருந்தகம் தொடங்குபவர்களுக்கு ரூ.3 லட்சம் மானியத்தோடு கடனுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

மேலும் படிக்க - செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

இதேபோல், ஓய்வுப்பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow