Independence Day 2024 : 78வது சுதந்திர தின கொண்டாட்டம்... செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி!
PM Modi Host Flag on Independence Day 2024 in Delhi : 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவது இது 11வது முறை ஆகும்.
PM Modi Host Flag on Independence Day 2024 in Delhi : '2047ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியா' என்ற கருப்பொருளை கொண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து டெல்லி செங்கோட்டைக்கு சென்ற அவர், முப்படைகளின் சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மேலும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 முறை தொடர்ச்சியாக செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியுள்ளார். நேருவின் மகள் இந்திரா காந்தி 16 முறையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ச்சியாக 10 முறையும் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக 11-வது முறையாக இன்று தேசிய கொடி ஏற்றினார். இதன்மூலம் மன்மோகன் சிங்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது 140 கோடி மக்களின் கனவு என செங்கோட்டையில் மூவர்ணக் கொடியேற்றி பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். வெறும் 40 கோடி இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை அப்போது தூக்கியெறிந்த நிலையில், இன்றைய 140 கோடி இந்தியர்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டார். உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும் எனக் கூறிய அவர், வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது 140 கோடி மக்களின் கனவு என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம் எனவும், பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்பதாகவும் அவர் கூறினார். நாட்டின் 3வது பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்க உள்ளது என்றும், உள்நாட்டு தயாரிப்பு ஊக்குவிப்புக்கான Vocal for Local என்பது இந்தியாவின் தன்னிறைவு மந்திரமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் வளர்ச்சியை நோக்கி பயணித்துள்ளதாகவும், வங்கி சீரமைப்பு நடவடிக்கைகளால் சிறுகுறு தொழில்கள் வளர்ச்சியைக் கண்டுள்ளன எனவும் பிரதமர் கூறினார். அதேபோல், இந்திய பொருளாதாரத்தை கொரோனா பாதிக்கவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், உச்சநீதிமன்றமே குடியுரிமை திருத்தச் சட்டத்தை பரிந்துரைத்துள்ளது எனக் கூறியதோடு, பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளை வலியுறுத்தினார். மேலும் செயற்கைகோளை விண்ணில் ஏவ வல்லரசு நாடுகளும் இந்தியாவை நாடுகின்றன என பெருமிதமாக தெரிவித்தார். அதேபோல், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சித்து வருவதாகவும் கூறினார். புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித்துறை சீரமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்சநீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது எனக்கூறிய அவர், பாதுகாப்பான குடியுரிமை திருத்தம் இந்தியாவுக்குத் தேவையே தவிர, வகுப்புவாத சட்டம் அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க - சுதந்திரதின விழா... நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!
மேலும், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், குற்றவாளிகளின் நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமெனவும் கூறினார். இந்தியாவின் முன்னேற்றத்தை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும், சில எதிர்மறையாளர்கள் அராஜகத்தையே எப்போதும் விரும்புகின்றனர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். வங்கதேசத்தில் அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், வளமான அமைதியான வங்கதேசமே தற்போது தேவை எனவும் கூறினார்.
What's Your Reaction?