சென்னை ஆயிரம் விளக்கு ரங்கூன் தெரு பகுதியில் தனியார் நிறுவன அதிகாரியின் வீட்டில், 100 சவரன் தங்க நகைகள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு ரங்கூன் தெருவை சேர்ந்தவர் சூசை ராஜ். இவர் சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 3ஆம் தேதி சூசை ராஜ் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை திருச்சியில் இருந்து வீட்டிற்கு வந்து போது வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இது குறித்து சூசை ராஜ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகை திருடு போன சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சூசை ராஜ் மட்டுமே தனியாக சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவரது வீட்டில் அவரது மனைவி மற்றும் வீட்டு பணியாட்கள் இருந்திருக்கிறார்கள். வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. ஆனால் 100 சவரன் நகை திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.