தமிழ்நாட்டில் மதுவிலக்கு வாய்ப்பில்லை ராஜா... அமைச்சர் முத்துசாமி சொன்ன காரணத்தை கேட்டா ஆடிப்போவீங்க!
சென்னை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. எனவே டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் அடைத்து முழுமையாக மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டை மதுவின் பிடியில் இருந்து மீட்க முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த சட்ட மசோதாவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி கொண்டு வந்தார். இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.
இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்; ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கள்ளச்சாராயம் விற்பவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
இதற்கிடையே மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் 'தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை குறைக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ''தமிழ்நாட்டில் தற்போது பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை. ஒரு மதுக்கடையை மூடினால் அடுத்த கடையில் போய் மக்கள் குடிக்கிறார்கள். இதனால் மதுக்கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை உடனடியாக நிறைவேற்றியது. ஆனாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை எங்கே குறைந்துள்ளது? தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுப்பார்'' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவின் காரணமாக பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. மேலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க மது முக்கிய காரணமாக விளங்கி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் தமிழ்நாடு அரசு மது விலக்கு இப்போது சாத்தியமில்லை என்று கூறி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?