மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

Jul 6, 2024 - 16:57
Jul 6, 2024 - 18:18
 0
மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!
மத்திய பட்ஜெட் 2024

டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்றம் கடந்த 24ம் தேதி கூடியது.

இந்த கூட்டத்தின் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின்னர் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்களவையின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். 

அதன்பிறகுதான் நாடாளுமன்ற கூட்டம் சூடுபிடித்தது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பாஜாகவை கடுமையாக சாடினார்.

மக்களவையில் சிவபெருமான் படத்தை எடுத்துக்காட்டிய ராகுல் காந்தி, ''சிவபெருமானின் கையில் உள்ள திரிசூலம் அகிம்சையை போதிக்கிறது. ஆனால் பாஜகவில் உள்ள இந்துக்கள் வன்முறையாளர்கள்'' என்று அதிரடியாக பேசினார்.

இதற்கு பிரதமர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தபோது, ''இந்து மதம் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் மட்டும் சொந்தம் இல்லை'' என்று கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ராகுல் காந்தியின் மதம் குறித்த பேச்சுக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை கிண்டலாக பேசினார். ராகுல் காந்தி மக்களவையில் சிறு குழந்தைகள்போல் நடந்து கொள்வதாக தெரிவித்த பிரதமர் மோடி, 3வது முறையாக மக்கள் காங்கிரசை நிராகரித்துள்ளனர் என்றார்.

மேலும் காங்கிரஸ் 100 தொகுதிகளில் போட்டியிட்டு 99 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டுதான் 99 தொகுதிகளில் வென்றுள்ளது என்று பிரதமர் மோடி கிண்டலடித்தார். பின்னர் பிரதமரின் உரைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் என தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற கூட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். ஜூலை 23ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow