டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

Jun 30, 2024 - 10:28
Jul 1, 2024 - 16:34
 0
டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!
இந்திய அணி

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி கோப்பை வென்ற நிலையில் தற்போது ரோகித் சர்மா படை சாதித்து காட்டியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 176/7 ரன்கள் குவித்தது. பின்பு சவாலான இலக்கை நோக்கி ஆடிய  தென்னாப்பிரிக்கா 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 59 பந்தில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 'எக்ஸ்' தளம் வாயிலாக வீடியோ வெளியிட்டு வாழ்த்திய பிரதமர் மோடி, ''இந்திய அணி தனது ஸ்டைலில் மீண்டும் கோப்பையை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய வீரர்களால் நாடே பெருமை கொள்கிறது'' என்றார். மேலும் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகவும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''தொடர் முழுவதும் கடினமான சவாலை வெளிப்படுத்திய இந்திய அணியின் வெற்றிக்காக பெருமை கொள்கிறோம்'' என்றார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ''பிரம்மித்தக்க வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது'' என்றார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''முழுமையான ஆதிக்கத்துடன், நம் இந்திய அணி வீரர்கள் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளதைக் கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களிலும் இணையற்ற அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திய நமது இந்திய அணி, தோல்வியே காணாமல் உலகக் கோப்பைத் தொடரை நிறைவுசெய்துள்ளது. இந்தியாவுக்குப் பாராட்டுகள்'' என்று கூறியுள்ளார்.

இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow