டி20 கிரிக்கெட்டில் இருந்து 'கிங்' கோலி, 'ஹிட்மேன்' ரோகித் ஓய்வு... பயிற்சியாளர் டிராவிட்டும் விடை பெற்றார்!
125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்படாஸ்: இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 176/7 ரன்கள் குவித்தது. பின்பு சவாலான இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 59 பந்தில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, டியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பைனலில் கதாநாயகனாக விளங்கிய விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கோலி, ''டி20 போட்டிகளில் இதுதான் எனது கடைசி போட்டியாகும். அடுத்த தலைமுறை அணிக்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளார்.
125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 5 சதங்கள், 32 அரைசதங்களுடன் 4,231 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியின் சாம்பியன் வீரர்களான இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருந்த நிலையில், அவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது. கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இது டிராவிட்டுக்கு கடும் ஏமாற்றம் அளித்தது. ஆனால் இப்போது இந்திய அணி வீரர்கள் டி20 உலகக்கோப்பையை வென்று ராகுல் டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?