ஆர்சிபியின் புதிய யுக்தி.. பயிற்சியாளரை மாற்றிய நிர்வாகம்..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணி ரஞ்சி டிராபி மற்றும் இரானி டிராபி கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்த ஓம்கார் சால்வி பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. மும்பை ரஞ்சி அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ஓம்கார் சால்வி, வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை வழிநடத்தவுள்ளார்.
46 வயதான ஓம்கார் சால்வி 2023-24 ரஞ்சி சீசனுக்கான மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த சீசனில் மும்பை அணி ரஞ்சி டிராபி மற்றும் இரானி டிராபி கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மும்பை ரஞ்சி அணியின் பயிற்சியாளராக இருக்கும் சால்வியின் பதவிக்காலம் மார்ச் 2025ல் முடிவடைய உள்ளதை தொடர்ந்து ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆர்சிபி அணியின் வீக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த தினேஷ் கார்த்தி கடந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவர், 2025 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவரைத் தொடர்ந்து புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாக இயக்குநர், ஆர்சிபியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவரது நீண்ட அனுபவம், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில், மற்றும் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவர் பெற்ற வெற்றிகள், அவர் எங்கள் பயிற்சியாளர் குழுவிற்கு மிகவும் பொருத்தமானவர். ஓம்காரின் தொழில்நுட்ப நிபுணத்துவம், உள்ளூர் அறிவு மற்றும் தலைமைத்துவம் ஆகியவை எங்கள் அணிக்கும் பெரும் மதிப்பைச் சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையும் வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து அணியில் மாற்றங்களை கொண்டு வருகிறது. 17 வருடங்களாக ஈ சாலா கம் நம்தே என்று தவமிருக்கும் ஆர்சிபி அணியின் ரசிகர்களுக்காக தினேஷ் கார்த்தி மற்றும் ஓம்கார் சால்வி இருவரும் இணைந்து இந்த வருட கோப்பையை வென்று தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?